×

ஒரே ரேஷன், ஒரே தேர்வு, ஒரே மொழி வரிசையில் நாடு முழுக்க ஒரே தேதியில் சம்பளம் : மத்திய அரசு அடுத்த திட்டம்

புதுடெல்லி: ஒரே நாடு - ஒரே அடையாள அட்டை, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் வரிசையில் `ஒரே நாடு; ஒரே சம்பள நாள்’ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்தியில் கடந்த 2014ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜ அரசு பதவியேற்றதில் இருந்து, ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இதற்காக, நாடு முழுவதற்கும் ஒரே சட்டம், ஒரே அடையாள அட்டை, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே கல்வி நடைமுறை ஆகியவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது அது, நாடு முழுவதும் ஒரே தேதியில் சம்பளம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த முயற்சி எடுத்துள்ளது. இதற்கான சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளன. தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் மத்திய கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நேற்று, ‘பாதுகாப்பு தலைமை உச்சி மாநாடு- 2019’ நடைபெற்றது. இதில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கலந்து கொண்டு பேசியதாவது:

நாடு முழுவதிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கிடைப்பதையும் உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்டங்களை விரைவில் அமல்படுத்த, பிரதமர் மோடி ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல், நாடு முழுவதற்கும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும், தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு, தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பணிச் சூழல் பாதுகாப்பு, ஊதிய விதிமுறைகளையும் தேசிய அளவில் ஒரே மாதிரியாக வரைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், ஊதிய விதிமுறைக்கான மசோதா, நாடாளுமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் தற்போது வேகமாக வகுக்கப்பட்டு வருகிறது. தொழில் பாதுகாப்பு, தொழிலாளர்கள் சுகாதாரம் மற்றும்
பணிச்சூழலுக்கான மசோதா, கடந்த ஜூலை 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இவற்றை சரியாக பின்பற்ற அரசு பல்வேறு கடுமையான சட்டங்களை வகுத்துள்ளது. இதன் மூலம், தனியார் துறைகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட 13 மத்திய தொழிலாளர் சட்டங்கள் இணைக்கப்பட்டு, அவர்களின் நலனை மேம்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இந்த திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு முறையான பணி நியமன கடிதம் வழங்குவது, ஆண்டுக்கொரு முறை இலவச மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட உள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர கடந்த 2014ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து மோடி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, தொழிலாளர் சட்டங்களில் உள்ள சிக்கலான 44 சட்டங்களில் மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அத்துறைகளின் நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதே போல், எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற வகையில், பல்வேறு துறைகளில் எழும் புகார்களுக்கு தீர்வு காண்பதற்காக, ‘ஒரு பக்கம்’ என்ற செயல் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், அதிகாரிகள் நேரில் செல்லாமலேயே ஆன்லைன் மூலமாக சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு 48 நேரத்துக்குள் தீர்வு காணப்பட உள்ளது. தற்போதைய சூழலில், 90 லட்சம் ஊழியர்களை கொண்ட தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் அதிகளவில் வேலை வாய்ப்பை உருவாக்கி வருகின்றன. எதிர்காலத்தில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சாத்தியக்கூறுகள் இத்துறைக்கு உள்ளது. இத்துறையின் வளர்ச்சியை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.

முக்கிய அம்சங்கள்

* நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு ஒரே தேதியில் சம்பளம்
* நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதிய விகிதம்
* சிக்கலான 44 தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம்.
* புகார்களுக்கு தீர்வு காண்பதற்காக ‘ஒரு பக்கம்’ ஆன்லைன் செயல் திட்டம்.
* வேலையில் சேரும் தொழிலாளர்களுக்கு முறையான பணி நியமன கடிதம்.
* ஆண்டுக்கு ஒருமுறை நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை.

Tags : government ,country , Single ration, single choice, single language salary same date, central government
× RELATED 100 % வாக்களிப்பு கோரி மனித சங்கிலி அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு