அதிமுக பேனர், கொடிக்கம்பம் விழுந்து பெண்கள் பாதிப்பு விவகாரம்: தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகளிர் ஆணையத்தில் புதிய வழக்கு தாக்கல்

புதுடெல்லி: தமிழகத்தில் அதிமுக பேனர் விழுந்து பெண்கள் பாதிப்படைந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையத்தில் நேற்று புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தமிழகத்தின் மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 11, 12ம் தேதிகளில் நடைபெற்றது. அவர்களது வருகையின் போது வரவேற்பு பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர்  நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை மொத்தம் 14 இடங்களில் பேனர் வைக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம் பேனர் வைப்பதற்கு அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இது பாரபட்சமான உத்தரவு என எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் குற்றச்சாட்டு எழுப்பினர்.  இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, தேசிய மகளிர் ஆணையத்தில் ஒரு புதிய வழக்கை தொடர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள், பேனர்கள், போஸ்டர்கள் வைக்கும் கலாசாரம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிகரித்து விட்டது. இதனால் பல கொடூர விபத்துக்கள் நடந்து உயிரிழப்புகளும் அரங்கேறியுள்ளன.  சாலைகளில் வைக்கப்படும் பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்களை தொடர்ந்து ஏற்படுத்தியதால்தான் அதற்கு தடை விதித்து ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இந்த தடை என்பது அரசுக்கு பொருந்தாது என குறிப்பிடப்பட்டது. இதுபோன்ற உத்தரவு தவறான முன் உதாரனம் ஆகும். சென்னையில் அதிமுக பிரமுகர் ஒருவர் சாலையின் நடுவே வைத்திருந்த பேனர்  விழுந்ததில் தான் நிலைதடுமாறிய சுபஎன்ற பெண் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (31) என்பவர், அதிமுக கொடி கட்டிய  கம்பம் ஒன்று சாய்ந்ததில் நிலைத்தடுமாறிய ஸ்கூட்டருடன் கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி ஏறியதில் படுகாயம் அடைந்தார்.

தற்போது அவரது ஒரு கால் அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவங்கள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தவறிய தமிழக தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும். இதில் மாநில அரசு தோல்வியடைந்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் இரும்பு கொடிக் கம்பங்கள் ஆகியவற்றை நீக்க உத்தரவிட வேண்டும். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து பாதிப்பில்லாத நடுநிலைமையோடு கூடிய உத்தரவை பிறப்பிக்க  வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: