பெங்களூரு ரேஸ்கோர்சில் பந்தய குதிரை தோற்றதால் பணத்தை கேட்டு ரகளை: போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரு ரேஸ்கோர்சில் குதிரை பந்தயம் நடந்தபோது ஒரு குதிரை கீழே  விழுந்து தோற்று போனது. இதனால் அந்த குதிரை மீது பந்தயம் கட்டிய ரசிகர்கள்  பணத்தை திருப்பிக்கேட்டு ரகளையில் ஈடுபட்டனர்.  அவர்களை போலீசார்  விரட்டியடித்தனர். பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் குதிரைப்பந்தய  மைதானம் (ரேஸ்கோர்ஸ்) உள்ளது. அங்கு குளிர்கால சீசனுக்கான முதல்நாள்  பந்தயம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஏராளமான  குதிரைப்பந்தய ரசிகர்கள் தங்கள்  அபிமான குதிரைகள் மீது பணம் கட்டினர்.  

அப்போது, பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடிய குதிரைகளில் ஒன்று நிலை தடுமாறி குப்புற கீழே விழுந்தது. இதில் அக்குதிரையின் கால் முறிந்து தோற்றுப்போனது. மேலும் இந்த விபத்தில் மூன்று ஜாக்கிகளுக்கு  காயம் ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர்.

இதற்கிடையே, கீழே விழுந்த குதிரை மீது பணம்  கட்டியவர்கள், தாங்கள்  கட்டிய பணத்தை திருப்பித் தரும்படி டர்ப் கிளப்  ஊழியரிடம் கேட்டனர். ஆனால், அவர் பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார்.  இதனால், கீழே விழுந்த குதிரை மீது பணம் கட்டிய நூற்றுக்கும் மேற்பட்டோர்  ரகளையில் ஈடுபட்டனர். டர்ப் கிளப்பில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட  பொருட்களை அடித்து நொறுக்கினர். பணம் கொடுக்க மறுத்தவரையும் தாக்கினர். தகவல்  அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை அடித்து  விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

Related Stories: