நீட் தேர்வால் மாணவி அனிதா உள்பட 7 பேர் தற்கொலை: தற்கொலைக்கு யார் காரணம் என்று விவாதம் நடத்த முன் வருகிறார்களா?... ஸ்டாலின் கேள்வி

தருமபுரி: தருமபுரியில் நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். சென்னையில் கடந்த வாரம் திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது. அதன்படி, தர்மபுரி மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தர்மபுரி வள்ளலார் திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.20 மணிக்கு வந்தார்.

அவருக்கு சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்  வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம்,  தேர்தல்  பணிக்குழு செயலாளர் செல்வகணபதி, எம்பி பார்த்திபன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் செந்தில்குமாரை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி கூறினார். இப்போது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியுள்ளது. இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை நிரூபிக்கத்தான் தருமபுரியில் இந்த தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம். இந்தியாவுக்கே குரல் கொடுக்கும் அளவுக்கு திமுக எம்.பி.க்கள் செயல்பாடு உள்ளது.

இந்தி திணிப்பு, காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்துக்கும் திமுக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். ஒன்றல்ல; பலமுறை சிறைக்குச் சென்றவன் நான். சிறை சென்றது கொலை செய்துவிட்டோ, கொள்ளையடித்துவிட்டோ அல்ல, மக்கள் பிரச்னைகளுக்காக பல முறை சிறை சென்றவன் நான் என கூறினார். திமுக மீது தொடர்ந்து சிலர் விமர்சனம் முன் வைக்கின்றனர். மத்திய மாநில அரசுகளை விமர்சிக்க தயங்குகின்றனர். நீட் தேர்வால் மாணவி அனிதா உள்பட 7 பேர் தற்கொலை செய்தனர். 7 பேர் தற்கொலைக்கு யார் காரணம் என்று விவாதம் நடத்த முன் வருகிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு பணியில் வட மாநிலத்தவர் நியமனம் செய்யப்படுகின்றனர்.

வடமாநிலத்தவரை அரசு பணியில் சேருவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உலக முதலீட்டாளர்கள் யாருக்கும் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை. தமிழக முதல்வர் வேலைவாய்ப்பு திட்டங்களை பொய்யாக அறிவித்து வருகிறார் என்று பேசினார்.

Related Stories: