மோசமான வானிலையால் பரபரப்பு: நடுவானில் தடுமாறிய இந்திய விமானம்.. வழிநடத்தி உதவிய பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: கடும் மழை காரணமாக மோசமான வானிலையில் பறந்த இந்திய விமானம் நடுவானில் தடுமாறியபோது உரிய திசையில் பாகிஸ்தான் வழிநடத்தி உதவிய சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. பாகிஸ்தானில் தற்போது கடுமையான மழைப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அங்கு இரண்டே நாட்களில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தியாவின் ஜெய்ப்பூரிலிருந்து பாகிஸ்தான் வழியாக மஸ்கட் பறந்த இந்திய விமானம் ஒன்று மோசமான வானிலையில் சிக்கி பின் மீட்கப்பட்டதாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

அதில், ஜெய்ப்பூரிலிருந்து மஸ்கட்டிற்கு பறந்து கொண்டிருந்த விமானம் திக்கு தெரியாமல் தடுமாறியபோது, உரிய நேரத்தில் வழிநடத்தி ஆபத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது. இது எமர்ஜென்சி விமானப் போக்குவரத்து உதவியாக வழிநடத்தப்பட்ட ஒன்று என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நேற்று முன்தினம் 150 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த இந்திய விமானம், கராச்சி பிராந்தியத்தின் மீது பறந்து கொண்டிருந்தது. நடுவானில், அது பல மின்னல்களுடன் ஒரு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மோசமான வானிலையில் திடீரென சிக்கியது. மின்னல் தாக்கப்பட்ட விமானம் 36,000 அடி உயரத்தில் இருந்து 34,000 அடியாக உடனடியாக உயரம் தாழ்ந்தது.

இதன் விளைவாக, பைலட் அவசர நெறிமுறையில் அழைப்பு விடுத்ததால், பாகிஸ்தானைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர், அடர்த்தியான விமானப் போக்குவரத்து வழியாக அதை இயக்க உதவினார். தெற்கு சிந்து மாகாணத்தின் சோர் பகுதி அருகே இந்த விமானம் அசாதாரண வானிலையைச் சந்தித்ததாக விமானப் போக்குவரத்து ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் உதவி ஜெய்ப்பூர் மஸ்கட் விமானத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. இஸ்லாமாபாத், ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் மீதான எதிர்ப்பாக இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியை அணுகுவதைத் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: