×

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு: நடைதிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனம் செய்யலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் 28ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. தொடர்ந்து இளம்பெண்கள் சபரிமலை சென்றதால் கேரளாவில் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக 55,650 பேர் மீது 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2,200 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மண்டல, மகர விளக்கு காலத்தில் சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. வருமானமும் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் இளம்பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விசாரணையை 7 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றியது. ஆனால் கடந்த ஆண்டு உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை என கூறியது. இந்நிலையில் சீராய்வு மனு நிலுவையில் இருக்கும் காரணத்தால், சபரிமலைக்கு வரக்கூடிய இளம்வயது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள மாநில அரசு கைவிரித்துவிட்டது. இதனிடையே உச்சநீதிமன்றம் தீர்ப்பை சுட்டிக்காட்டி சாமி தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். பெண்கள் ஆர்வலரான திருப்தி தேசாயும் சபரிமலை வர உள்ளதாக அறிவித்துள்ளார். நிலக்கல் மற்றும் பம்பையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து இன்று கேரளா வந்த 10 பெண்களை பம்பையில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழக்கப்படாது என கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டுள்ளது. மண்டல காலம் நாளை (நவ. 17) துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும். கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும் காலம் மண்டல காலம்.

இந்த பூஜைக்காக இன்று (நவ.,16) மாலை 4.55 மணியளவில் சபரிமலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி சரணகோஷம் முழங்க, நடை திறந்து விளக்கேற்றினார். தொடர்ந்து குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின் மூலஸ்தானம் வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.


Tags : Opening Ceremony ,Sabarimalai Iyyappan Temple , Mandala Pooja, Sabarimala Iyyappan Temple, Walk Open
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா