மகாராஷ்டிராவில் சிவசேனா, என்சிபி, காங். கூட்டணி ஆளுநருடனான சந்திப்பு ஒத்திவைப்பு

மகாராஷ்ட்டிரா: மராட்டிய மாநிலத்தில் கவர்னருடனான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களின் சந்திப்பு ஒத்திவைக்கபட்டுள்ளது. மகாராஷ்டிரா பாஜ - சிவசேனா உறவு முறிந்த நிலையில், அந்த கூட்டணி ஆட்சி அமையாததால் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இருந்தும், புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக, அடுத்தகட்ட நகர்வுகளை சிவசேனா கட்சி அதிரடியாக தொடங்கிவிட்டது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா தலைவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கிய நிலையில், அதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பதவி யாருக்கு என்ற அம்சத்தில் உடன்பாடு எட்டப்பட்டதால், மூன்று கட்சிகளும் புதிய ஆட்சி அமைவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

அதன்படி, சிவசேனாவுக்கு 16, தேசியவாத காங்கிரசுக்கு 14, காங்கிரசுக்கு 12 அமைச்சர் பதவிகளை ஒதுக்க, ஏற்கனவே 3 கட்சிகளும் முடிவு செய்துள்ளன. சட்டப்பேரவை சபாநாயகர் பதவி காங்கிரசுக்கும், துணை சபாநாயகர் பதவி சிவசேனாவுக்கும் செல்லும் எனத் தெரிகிறது. இதேபோல சட்ட மேலவை சபாநாயகர் பதவி தேசியவாத காங்கிரசுக்கும் துணை சபாநாயகர் பதவி சிவசேனாவுக்கும் கிடைக்கும் எனத் தெரிகிறது. மேலும் 40 அம்சங்கள் கொண்ட குறைந்தபட்ச வரைவு செயல்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு, சிறுபான்மையினர் நலன், வேலைவாய்ப்பு உருவாக்கம் என பல்வேறு அம்சங்கள் குறைந்த பட்ச வரைவு செயல் திட்டத்தில் இடம் பெற்றள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர், துணை முதல்வர் பதவிகள், குறைந்தபட்ச வரைவு செயல்திட்டம் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் தங்களுக்குள் நேரில் கலந்து பேசி, வரும் 19ம் தேதி இறுதி முடிவை அறிவிக்க உள்ளார்கள் என தகவல்கள் கூறுகின்றன. இருந்தும், நாளை டெல்லியில் சோனியாவை சரத்பவார் சந்தித்த பின்னர், புதிய கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றே தெரிகிறது. இந்நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள்  இன்று மாலை கவர்னரை சந்திக்க முடிவு செய்து இருந்தனர். அதற்கான நேரமும் கேட்டு இருந்தனர். விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சார்பில்  கவர்னரிடம் நேரம் கேட்டு இருந்தனர்.

மராட்டிய ஆளுநரை மாலை 4.30 மணிக்கு 3 கட்சித் தலைவர்களும் சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். தம்மை சந்திக்க 3 கட்சித் தலைவர்களுக்கும் மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷியாரி இன்னும் நேரம் ஒதுக்காததால் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

>