புதிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பில்லை : அமைச்சர் எஸ்.பி வேலுமணி விளக்கம்

சென்னை : புதிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பில்லை என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். புதிதாக மறுவரையறுக்கப்பட்டு 2018ல் வெளியிடப்பட்ட வார்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் புதிய 5 மாவட்டங்களை  உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  

இந்நிலையில் பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நிலையில், இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி விடுத்துள்ள அறிக்கையில், 2020ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் பூர்வாங்கப் பணிகள் தொடங்க இருப்பதால், வரும் டிசம்பர் 31க்குப் பிறகு எந்த ஒரு நிர்வாக அலகையும் புதிதாக ஏற்படுத்த முடியாது என்பதால், அதற்கு முன்பாக மாவட்டங்களைப் பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கானப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதால், பழைய எல்லை வரையறைப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றங்கள் தேவைப்படின் உள்ளாட்சித் தேர்தல் முடிவுற்ற பின்னர் அரசால் அவை மேற்கொள்ளப்படும் என்றும் வேலுமணி தெரிவித்துள்ளார். எனவே, புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதற்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>