நீதிமன்ற அறிவுரையை ஏற்று, வேலூர் சிறையில் கடந்த 6 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்

வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன், வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து 6 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். வேலூர் சிறையில் பாதுகாப்பு இல்லை என கூறி புழல் சிறைக்கு மாற்றக்கோரி முருகன் உண்ணாவிரதமிருந்தார்

 

6 நாட்களாக முருகன் உண்ணாவிரதம்

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18ம் தேதி அவரது அறையிலிருந்து ஸ்மார்ட்போன் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டது.இதை கண்டித்து அவர் உண்ணாவிரதம் இருந்தார். சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து உண்ணாவிரதத்தை முருகன் கைவிட்டார்.

இந்நிலையில், ‘செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதற்காக தனிச்சிறைக்கு மாற்றப்பட்ட தன்னை மீண்டும் பழைய அறைக்கு மாற்றும் வரை தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன்’ என்று கூறி நவம்பர் 11ம் தேதி முதல் முருகன் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதற்காக சிறை கண்காணிப்பாளர் ஆண்டாளிடம் 2 பக்க மனு அளித்துள்ளார். அதில் 14ம் தேதி முதல் தண்ணீர் கூட குடிக்கப்போவதில்லை என்று தெரிவித்திருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.

உண்ணாவிரதம் இருக்க கூடாது என நீதிமன்றம் அறிவுரை

இந்த நிலையில் முருகனை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதிக்கக் கோரி முருகனின் உறவினர் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறைத்துறை அதிகாரிகள், முருகனை அவரது மனைவி நளினி மற்றும் அவரது உறவினர்கள் சந்திக்க அனுமதி வழங்கினர். அப்போது நிர்வாகக் காரணங்களுக்காக சிறைச்சாலையின் மற்றொரு பகுதிக்கு முருகனை மாற்றியுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளதை அடுத்து முருகனுக்கு சிறை மாற்ற முடியாது என்றும் இனிவரும் காலங்களில் முருகன் சிறைக்குள் இதுபோன்ற உண்ணாவிரதம் இருக்க கூடாது என மனுதாரர் அவரது வக்கீல்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

உண்ணாவிரதம் வாபஸ்

இந்த உத்தரவு சிறையில் உண்ணாவிரதம் இருந்த முருகனுக்கு நவம்பர் 15ந்தேதி காலை தெரிவிக்கப்பட்டது. அவரது உண்ணாவிரதம் இன்று 6-வது நாளாக நீடித்தது. இன்று அவரது வழக்கறிஞர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கூறினர். மேலும் நீதிமன்றம் தெரிவித்த கருத்தையும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவர் உண்ணாவிரதத்தை திரும்ப பெற்றுக்கொண்டு உணவு உண்ண தொடங்கியுள்ளார் என வேலூர் சிறைத்துறை தரப்பில் இருந்து தகவல் கூறியுள்ளனர். கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதமிருந்த முருகன், அதனை திரும்ப பெற்றார். அவரின் பிரதான கோரிக்கை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்பது. அதுப்பற்றி சிறைத்துறை என்ன முடிவெடுக்கவுள்ளது என்பது இதுவரை தெரியவில்லை.

Related Stories:

>