எனது மகள் பாத்திமாவுக்கு ஏற்பட்டது போல் வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது : ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் பேட்டி

சென்னை: விசாரணையில் தனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று பாத்திமாவின் தந்தை லத்தீஃப் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

ஐஐடி மாணவி தற்கொலை

சென்னை கிண்டி, ஐஐடியில் கேரள மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் (18) படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள சரவியூ விடுதி அறை எண் 349ல் தங்கியிருந்து, மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு படித்தார். கடந்த 9ம் தேதி இரவு விடுதியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் செல்போனில் தற்கொலைக்கான காரணத்தை எழுதியிருப்பது தெரிந்தது. சில ஐஐடி பேராசிரியர்களின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

பாத்திமா தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

இந்நிலையில் இன்று காலை ஐஐடி மாணவி பாத்திமா தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் 11 மணிக்கு நிறைவடைந்தது. சிறப்பு விசாரணை குழு அதிகாரி மெஹலினா தலைமையிலான போலீசார் மற்றும் காவல்துறை கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் லத்தீப்பிடம் விசாரணை நடத்தினர். சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள இல்லத்தில் இந்த விசாரணை நடந்தது. அப்போது மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வாட்ஸ் அப் ஆதாரங்களை அப்துல் லத்தீப் ஒப்படைத்தார்.

அந்த விசாரணையின் போது, பாத்திமாவின் சகோதரியை விசாரணைக்கு அழைத்து வருமாறு தந்தையிடம் காவல்துறை தெரிவித்துள்ளது. மாணவி பாத்திமாவின் மின்னணு கருவிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாத்திமா தற்கொலை தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் தாக்கல் செய்யவும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. பாத்திமாவின் செல்போனை தடயவியல் நிபுணர்கள், தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பாத்திமா தந்தை அப்துல் லத்தீப் பேட்டி

பின்னர் அப்துல் லத்தீப் நிருபர்களிடம் கூறியதாவது: பாத்திமா தொடர்பாக எங்களிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம். பாத்திமாவின் கைரேகைக்கான ஆதாரங்களையும் ஒப்படைத்துள்ளேன். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை என காவல்துறை உறுதி அளித்துள்ளது. விசாரணையில் எனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் தான் படிக்க வேண்டுமென பாத்திமா விரும்பினாள், பனராஸ் பல்கலையில் இடம் கிடைத்தும் பாத்திமா சேரவில்லை.தேவைப்பட்டால் பாத்திமாவின் சகோதரி விசாரணைக்கு ஆஜராவார். எங்களுக்கு ஏற்பட்ட நிலை, வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. எனது மகள் பாத்திமாவுக்கு ஏற்பட்டது போல் வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது, இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: