வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழையை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால், அணைகள், ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பியது. இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தேகி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டஙகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் நிலவும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மற்றும் சேரன்மகாதேவியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 9 செ.மீ மழையும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், மணியாச்சியில் 7 செ.மீ., கோத்தகிரியில் 6 செ.மீ., பவானியில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. தொடர்ந்து பாபநாசம், போடி, சிவகிரி, சாத்தான்குளம், தூத்துக்குடி, கொடைக்கானல் மற்றும் குன்னூரில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: