திருச்சியில் ரயில் முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு: மலையாளம் இடம்பெற்றிருந்ததால் பயணிகள் அதிர்ச்சி

திருச்சி: திருச்சியில் வழங்கப்பட்ட ரயில் முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, மலையாளம் இடம்பெற்றிருந்ததால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். ரயில்வேயில் அலுவலக மொழியாக இந்தி, ஆங்கிலம் இருந்தாலும் பயணிகளுக்காக அந்தந்த மாநிலங்களில் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் தமிழகத்தில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது. ரயில் நிலையங்களில் ஆங்கிலம், இந்தி பெயர்ப்பலகை இருந்தாலும் தமிழிலும் பெயர்ப்பலகை இருக்கும். மேலும் வண்டியின் பெயர், புறப்படும் மற்றும் சேரும் ஊரின் பெயர் பலகை, ரயில் நிலையத்தில் ஊர் பெயர் பலகை ஆகியவை தமிழிலிலும் இருப்பதை காணமுடியும். மேலும் ரயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் ஒரு பகுதியில் ஆங்கிலம், இந்தி மொழியில் அச்சடிக்கப்பட்டிருந்தாலும், மற்றொரு பகுதியில் தமிழ் மொழி இடம் பெற்றிருக்கும்.

ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய வரும் பயணிகள் பெரும்பாலும் படிவத்தில் தமிழ் மொழியில் விவரங்களை நிரப்புவது உண்டு. ஒரு சிலர் ஆங்கிலத்தில் நிரப்புவார்கள். இந்நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழில் இல்லை என்று பயணியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், விண்ணப்பத்தில் ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகள் மட்டுமே இருப்பதால் தமிழ் மட்டும் தெரிந்த பயணிகள் விண்ணப்ப தாளை பூர்த்தி செய்யமுடியாமல் கஷ்டப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். ரயில் முன்பதிவு விண்ணப்பத்திலும் திட்டமிட்டே தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பயணியர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய ரயில்வே அதிகாரிகள், ரயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தை சென்னையில் இருந்து அதிகாரிகள் பெறுவது உண்டு. இதில் கேரள மாநிலத்திற்குரிய டிக்கெட் படிவத்தை தவறுதலாக பெற்று வந்திருக்கலாம் என தெரிகிறது. இதனால் மலையாளம் அதில் இடம்பெற்றுள்ளது என்று கூறியுள்ளனர்.

Related Stories: