அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு

கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு நடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்களை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 200க்கும் மேற்பட்டவர்களை கொன்றதால், இலங்கை மக்கள் இப்போதும் ஒருவித பீதியுடனே உள்ளனர்.

இதனால், வாக்குப்பதிவு மையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்றைய வாக்குப்பதிவுக்காக நாடு முழுவதும் மொத்தம், 12,845 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 1 கோடியே 59 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இலங்கையில் துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள், இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்புவிலிருந்து சுமார் 250 கிமீ தொலைவியில் கடற்கரையை ஒட்டியுள்ள புட்டாளம் எனும் பகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. அவர்கள் வாக்குச் செலுத்த தொலைவில் இருக்கும் ஊரான மன்னாருக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அழைத்து செல்லபட்டுள்ளனர்.

இவர்கள் பாதுகாப்பிற்காக இலங்கை காவல்துறை மற்றும் ராணுவத்தினரும் உடன் இருந்துள்ளன. இருந்தபோதிலும் இவர்களை வாக்கு செலுத்தவிடாமல் தடுக்க, மர்மநபர்கள் திடீரென சாலையை மறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும் டையர்களை எரித்து சாலையை மறித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற போலீசார், சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தடுப்புகளை அகற்றியதோடு, வாக்காளர்களை பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு அழைத்துச்சென்றனர். இந்நிலையில், பேருந்தில் சென்றவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, இரண்டு பேருந்துகள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், அதே பகுதியில் வாக்காளார்களை வாக்குச் செலுத்தவிடாமல் தடுக்க கற்களை வீசும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: