மெட்ரோ ரயில் நிலையங்களில் சீருந்து இணைப்பு சேவையை மேம்படுத்த ஆலோசனை

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் சீருந்து இணைப்பு சேவையை மேம்படுத்துவது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ, கேப் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த சேவையை மாதம்தோறும் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்ட்ரல், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு, ஏஜி.டிஎம்எஸ் மற்றும் நந்தனம் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிதாக சீருந்து இணைப்பு சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியது. தற்போது, 10க்கும் மேற்பட்ட நிலையங்களில் இந்த சேவை செயல்பட்டு வருகிறது. இந்த இணைப்பு சேவை ரூ.10 கட்டணத்துடன் ஒவ்வொரு ரயில் நிலையத்தில் இருந்தும் 6 முதல் 8 கி.மீ தூரம் வரையில் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஷேர் ஆட்டோ மற்றும் கேப் சேவைக்கு கிடைக்கும் வரவேற்பு இந்த சீருந்து சேவைக்கு கிடைப்பதில்லை என்று தலைமை அலுவலகத்திற்கு புகார் சென்றது. சென்ட்ரல், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் தினம்தோறும் 10 பேர் கூட இச்சேவையை பயன்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, கடந்த 5ம் தேதி முதல் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில்  இயக்கப்பட்டு வந்த சீருந்து இணைப்பு சேவையை நிர்வாகம் நிறுத்தியது. மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவையை தொடர்ந்து இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. எனவே, மேற்கொண்டு பல மெட்ரோ ரயில் நிலையங்களில் இதேநிலை தொடராமல் இருக்க நேற்று அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சீருந்து இணைப்பு சேவை நிறுத்தப்பட்டது குறித்தும், தொடர்ந்து இதேநிலை நீடிக்காமல் இருக்க இச்சேவையை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, இச்சேவை செயல்படும் நிலையங்களில் விளம்பர பலகை வைத்து அறிவிப்பு செய்யப்படுகிறது. இதேபோல், டிஜிட்டல் விளம்பரம் வைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தற்போது மெட்ரோ ரயில் பயணிகள் மட்டுமே இச்சேவையை பயன்படுத்த முடியும். எனவே, அனைவரும் இச்சேவையை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: