×

குழந்தை பிறந்த ஒரே நாளில் தாய் சாவு அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

தண்டையார்பேட்டை: எர்ணாவூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (35). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மாலினி (32). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை பிரசவத்துக்காக ராயபுரத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை எடுக்க முடியும் என கூறியுள்ளனர். பின்னர், கடந்த 13ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் மாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, மாலினிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள், டாக்டர்களிடம் தெரிவித்தபோது, அலட்சியமாக பதில் கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாலினியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மாலினி பரிதாபமாக இறந்தார்.

இதையறிந்ததும் மாலினியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, தவறான சிகிச்சையாலும் அலட்சியமாக டாக்டர்கள் செயல்பட்டதாலும்தான் மாலினி இறந்துவிட்டார். இதற்கு டாக்டர்கள் தான் காரணம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், உடலை வாங்க மறுத்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் முத்துகுமார் மற்றும் ராயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து, மாலினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக ஸ்டான்லி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Relatives ,death hospital , Relatives block, mother's death, hospital overnight
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...