மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 1.33 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்

மீனம்பாக்கம்: மஸ்கட்டில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 1.33 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. இந்த விமானம் மீண்டும் மாலை 5.45 மணிக்கு மீண்டும் மஸ்கட்டுக்கு புறப்பட்டு செல்ல தயாராக இருந்தது.

இதனால், இந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, ஒரு இருக்கை வழக்கத்துக்கு மாறாக உயரமாக இருந்தது. ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில், அதை தூக்கி பார்த்தபோது, கருப்பு காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த 3 பார்சல்கள் இருந்தன. உடனே இதுபற்றி விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம், அந்த பார்சலை சோதனை செய்தனர். அதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் அந்த பார்சல்களை ஊழியர்கள் பிரித்து பார்த்தபோது, ஒவ்வொன்றிலும் ஒரு தங்கக்கட்டி வீதம் 3 தங்கக்கட்டிகள் இருந்தன. உடனே, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அவர்கள் விரைந்து வந்து, அந்த தங்கக்கட்டிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் மொத்த எடை 3 கிலோ 365 கிராம். இதன் சர்வதேச மதிப்பு 1.33 கோடி. இதையடுத்து அதிகாரிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து, தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது யார்?, என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிது.

கடத்தல் கும்பல், ஓமன் வழியாக சென்னைக்கு தங்கத்தை கடத்தி வந்துள்ளது, விமான நிலையத்தில் சோதனை கெடுபிடி அதிகமாக இருந்தது குறித்து, இங்கிருந்து யாரோ கடத்தல் ஆசாமிகளுக்கு தகவல் கொடுத்ததால், தங்கத்தை இருக்கை அடியில் வைத்துவிட்டு சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கடத்தல் ஆசாமிகள் பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: