×

அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் ஆன்லைனில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்

சேலம்:  தமிழக உயர்கல்வித்துறையின்கீழ் அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்தது. விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளாக நேற்று (15ம் தேதி) மாலை 5 மணி வரை அவகாசம் இருந்தது. மாநிலம் முழுவதும் 44,767 பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால், இவர்களில் 33,128 பேர் மட்டுமே, விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். பல்வேறு தரப்பிலும், சான்றிதழ்களை பெறுவதில் சிக்கல் நிலவியதால், 11,639 பேர் முழுமையாக விண்ணப்பிக்க முடியவில்லை. இதனையடுத்து, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய மட்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 15ம் தேதி மாலையுடன் நிறைவு பெற்றது.

இதன் பின்னர், புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது. முன் அனுபவ சான்றிதழ் பெற கால தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, பின்னர் வாய்ப்பு வழங்கப்படும். எனவே, பணி அனுபவ சான்றுகளை பெற முடியாத விண்ணப்பதாரர்கள், இந்த மாத இறுதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலரால் மேலொப்பமிட்ட சான்றுகளை பெற்று தயாராக வைத்திருக்க வேண்டும். அதனை பதிவேற்றம் செய்வதற்கான தேதிகள், விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், இமெயில் முகவரிக்கு ெமயில் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும். மேலும், கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து சில கூடுதல் விவரங்கள் தேவைப்படுகிறது. அவற்றை பதிவு செய்ய டிசம்பர் முதல் வாரத்தில் வாய்ப்பு வழங்கப்படும். அப்போது, கூடுதலாக கேட்கப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவை என்னென்ன விவரங்கள் என இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Government Arts Colleges ,Assistant Professor ,The Post , Government Arts College, Assistant Professor, Registration, Extra Time
× RELATED அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 7500...