×

நெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை கலெக்டர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை?

நெல்லை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை  கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம். விளை நிலங்கள் உள்ளவர்களிடம் விவசாய கூலிகளாகவும், பீடி நிறுவனங்களிலும், பிற கூலி வேலையிலும் ஈடுபட்டு பலர் குடும்பம் நடத்தி வருகின்றனர். குறைந்த ஊதியம் பெறும் இவர்களால் தற்போதைய விலைவாசியில் குடும்பம் நடத்துவது சிரமமாக உள்ளது. இதனால் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் பலர் தங்களது குடும்பத்தின் தேவைக்கு வருமானத்தை மீறி கந்து வட்டிக்கு கடன் பெறுகின்றனர்.  இவ்வாறு கடன் பெற்ற பல குடும்பங்கள் வட்டியும், முதலும் கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.  கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, இரு குழந்தைகளுடன் கடந்த 2017 அக்டோபர் 23ம் தேதி நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பின் கந்து வட்டி கொடுமையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் வந்து செல்லும் 10 வாயில்களில் 8 வாயில்கள் மூடப்பட்டு இரு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி சில நேரங்களில் தீக்குளிக்க முயன்ற  சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. கடந்த 11ம்தேதி மனுநீதிநாள் அன்று  கடையத்தைச்சேர்ந்த தம்பதியினர், தனது மகள், பேரக்குழந்தைகளுடன்  மனு அளிக்க வந்தவர்கள் போலீஸ் டார்ச்சரால் விஷம் குடித்ததாக கலெக்டரிடம் தெரிவித்தனர். கலெக்டர் உத்தரவின்பேரில் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் நெல்லையைச் சேர்ந்த பெயின்டர் அருள்ராஜ் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். கலெக்டர் அலுவலகத்தினுள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்திருந்து இவ்வாறு நடக்கிறது. இதைடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் கந்துவட்டி வசூலிப்போர் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Suicide ,District Collector ,Office In The District Of Rattanapattu , Paddy, Bribery, Collector, Suicide, Police
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...