நிலம் அளித்தவர்கள் 2 நாளில் முதல்வரை சந்திக்கிறார்கள் விவசாயிகள் யாரும் பாதிக்காத வகையில் உயர் மின்கோபுரம் அமைக்கப்படுகிறது: அமைச்சர் தங்கமணி தகவல்

நாமக்கல்: விவசாயிகள் பாதிக்காத வகையில், தமிழகத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கப்படுகிறது என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார். நாமக்கல்லில் நேற்று, மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:  கேரளாவில் 170 உயர்மின் கோபுரங்கள் அமைத்து மின் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதற்காகவே போராட்டத்தை அறிவித்து வருகிறார்கள். உயர்மின் கோபுரம் அமைப்பது, பல ஆண்டாக நடைபெற்று வரும்  வழக்கமான செயல். எனவே, தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது. விவசாயிகள் பாதிக்காத வகையில், உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு, நிவாரணங்களும் அளிக்கப்படுகிறது. இன்னும் இரு நாட்களில் உயர்மின் கோபுரங்களுக்கு நிலம் அளித்த விவசாயிகள், முதல்வரை சந்திக்க இருக்கிறார்கள். இதை திசை திருப்பும் வகையில், சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலின்பேரில் போராட்டங்களை, ஒரு சிலர் அறிவித்து வருவது முறையல்ல.  இவ்வாறு தங்கமணி தெரிவித்தார்.

முதல்வர் கருத்து கண்டனத்துக்குரியது: உயர் மின்கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான ஈசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளை அவமானப்படுத்தும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறி உள்ளார். சென்னை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் மின் கம்பங்களுக்கு பதிலாக கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

இதேபோல், மத்திய அரசு கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு கடல் வழியாக கேபிள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் விவசாய விளைநிலங்கள் வழியாக மின்கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லப்படும் என்று கூறுவது ஏன் என தெரியவில்லை. மேலும், வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராகவும், தடையாகவும் விவசாயிகள் இருப்பதுபோல கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது. விவசாய விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 18ம் தேதி 13 மாவட்டங்களில் 50 இடங்களில் விவசாயிகள் மேற்கொள்ளும் மறியல் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இவ்வாறு ஈசன் கூறி உள்ளார்.

Related Stories: