குமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய மின்னணு இயந்திரத்தில் 4 ஓட்டுகள் பதிவு செய்யும் வாக்காளர்கள்: உள்ளாட்சி தேர்தலுக்கு பரிசோதனை அடிப்படையில் அறிமுகம்

தமிழகத்திலேயே முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு இயந்திரம் பயன்படுத்தி வாக்காளர்கள் ஒரே நேரத்தில் 4 வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. நகர்புறங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். பிற மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளில் நடைபெறும் தேர்தலில் வாக்குபெட்டி-வாக்குசீட்டு முறையே இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் கிராம ஊராட்சி வார்டுகள், பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட  ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் என்று அனைத்து வார்டு உறுப்பினர், தலைவர் தேர்தலுக்கும் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.   இதில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தபடவுள்ள, பல பதவி ஒரு தேர்வு (மல்டி போஸ்ட்  சிங்கிள் சாய்ஸ்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான மின்னணு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பெல் பொறியாளர்கள் மின்னணு  இயந்திரகளை சரிபார்த்து தயார் நிலையில் வைத்துள்ளனர். மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில்  ஒரு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், 13 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 10 ஊராட்சி தலைவர், 114 ஊராட்சி உறுப்பினர் என மொத்தம் 138 பதவிகளுக்கு ஒரு வாக்காளர் 4 ஓட்டுகள்பதிவு செய்ய இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு 116 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 456 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தை தேர்ந்தெடுப்பதற்கான காரணம், நிர்வாக ரீதியில் ஒரே ஒன்றியத்திற்குள் உள்ளாட்சி பதவிகள் வருகிறது. மேலும் மக்களுடைய பங்களிப்பு, அலுவலர்கள் ஒத்துழைப்பு போன்ற பல்வேறு காரணங்களை ஆய்வு செய்துதான் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் ஒருவர் ஒரு வாக்கை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் இந்த வாக்காளர்கள் 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும்.  ஆதலால் ஒரு கன்ரோல் யூனிட்டும், 4 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர் வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மின்னணு வாக்குப்பதிவு வெற்றியை தொடர்ந்து அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும். இதற்கான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் குமரி மாவட்டம் பழவிளையில் உள்ள ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மூலம் நடைபெறவுள்ள மாதிரி வாக்குபதிவும் இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மேல்புறம் ஒன்றியத்தில் 742 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் 177 வாக்குபதிவு கட்டுப்பாட்டு கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

Related Stories: