இரட்டை சதம் விளாசினார் மயாங்க் அகர்வால் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன் குவித்தது இந்தியா : வங்கதேசத்துக்கு கடும் நெருக்கடி

இந்தூர்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன் குவித்து வலுவான முன்னிலை பெற்றது. தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் 243 ரன் விளாசி அசத்தினார். ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு சுருண்டது. முஷ்பிகுர் ரகிம் அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். கேப்டன் மோமினுல் ஹக் 37, லிட்டன் தாஸ் 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 3, இஷாந்த், உமேஷ், அஷ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்திருந்தது. ரோகித் 6 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மயாங்க் அகர்வால் 37 ரன் மற்றும் செதேஷ்வர் புஜாரா 43 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தது. புஜாரா 54 ரன் எடுத்து அபு ஜாயித் பந்துவீச்சில் மாற்று வீரர் சைப் உசேன் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி டக் அவுட்டாகி வெளியேற, வங்கதேச வீரர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். ஆனால், மயாங்க் - ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி பதிலடி கொடுத்தது. மயாங்க் சதம் விளாசி அசத்த, மறுமுனையில் ரகானே அரை சதம் அடித்தார். இருவரும் இணைந்து 190 ரன் சேர்த்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரகானே 86 ரன் (172 பந்து, 9 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினார். ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அபாரமாக விளையாடிய அகர்வால் இமாலய சிக்சருடன் இரட்டை சதத்தை நிறைவு செய்தார். அகர்வால் - ஜடேஜா இணை 5வது விக்கெட்டுக்கு 123 ரன் சேர்த்தது. அகர்வால் 243 ரன் (330 பந்து, 28 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி மிராஸ் சுழலில் அபு ஜாயித் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த விருத்திமான் சாஹா 12 ரன்னில் வெளியேற, ஜடேஜா - உமேஷ் யாதவ் இணைந்து வங்கதேச பந்துவீச்சை பதம் பார்த்தனர்.

உமேஷ் சிக்சர்களாகப் பறக்கவிட, ஜடேஜா அரை சதத்தை நிறைவு செய்தார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன் குவித்துள்ளது. ஜடேஜா 60 ரன் (76 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), உமேஷ் 25 ரன்னுடன் (10 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் உள்ளனர். வங்கதேச பந்துவீச்சில் அபு ஜாயித் 4, எபாதத், மிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 4 விக்கெட் இருக்க, இந்தியா 343 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளதால் வங்கதேச அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

பிராட்மேனை முந்தினார்!

* டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்சில் 2வது இரட்டை சதத்தை பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணி தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் 2வது இடத்தை பிடித்துள்ளார். அவர் தனது 12வது இன்னிங்சிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய அணி முன்னாள் நட்சத்திரம் வினோத் காம்ப்ளி 5 இன்னிங்சிலேயே தனது 2வது இரட்டை சதத்தை விளாசி முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய நட்சத்திரம் டான் பிராட்மேனுக்கு 13 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. அவர் தற்போது 3வது இடத்தில் உள்ளார்.

* 8 சிக்சர்களை விளாசிய அகர்வால், ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் நவ்ஜோத் சிங்குடன் (இலங்கைக்கு எதிராக லக்னோவில், 1994) முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

* நேற்று மட்டும் இந்திய அணி 88 ஓவரில் 407 ரன் குவித்து மிரட்டியது. முன்னதாக, 2009ல் இலங்கைக்கு எதிராக பிராபோர்ன் மைதானத்தில் நடந்த டெஸ்டின் 2வது நாளில் 443 ரன் குவித்துள்ளது.

* தனது 62வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஜிங்க்யா ரகானே 4000 ரன் என்ற சாதனை மைல்கல்லை நேற்று எட்டினார். அவர் இதுவரை 4061 ரன் (அதிகம் 188, சராசரி 43.66, சதம் 11, அரை சதம் 21) எடுத்துள்ளார்.

Related Stories: