டி.கே.சிவகுமார் ஜாமீனுக்கு எதிர்ப்பு அமலாக்க துறை மனு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கர்நாடகா முன்னாள் அமைச்சர்  டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவரும், இம்மாநில முன்னாள் அமைச்சருமான டிகே.சிவகுமாரை பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கடந்த  செப்டம்பரில் கைது செய்தது. இவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 23ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, டெல்லி திகார் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது.

நீதிபதிகள் ரோகிண்டன், எப்.நாரிமன் மற்றும் எஸ்.ரவீந்திரபட் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும்  கேட்ட பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘குற்றம்சாட்டப்பட்ட மனுதாரரை அமலாக்கத் துறை 20 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து  விசாரித்துள்ளது. மேலும், டெல்லி திகார் சிறையிலும்  தனியாக நான்கு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஒரு வழக்கில்  குற்றவாளியை காவலுக்கு எடுத்து விசாரணை நடத்தி முடித்தபின், சிறையில்  வைக்காமல் ஜாமீனில் விடுதலை செய்வது தான் உண்மையான தர்மம்.  அதனடிப்படையில் தான் சிவகுமார் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் ஜாமீனில்  விடுதலையாகி 23 நாட்கள் கடந்துள்ளது. இதுவரை வழக்கை திசை திரும்பும் எந்த  முயற்சியிலும் அவர் ஈடுபட்டதாக  தெரியவில்லை. தேவையின்றி ஒரு மனிதருக்கு மன  அழுத்தம் ஏற்படும் வரை தொல்லை கொடுக்க கூடாது,’ என கூறி, அமலாக்கத் துறையின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories:

>