ஆந்திராவில் நடந்த தேர்தலுக்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 86.15 கோடி செலவு : பிரசாந்த் கிஷோருக்கு 37.57 கோடியாம்

திருமலை: ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலுக்காக 86.15 கோடியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி செலவு செய்துள்ளது. இதில் இக்கட்சியின் ஆலோசகராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர் குழுவினருக்கு மட்டும் 37.57 கோடி செலவிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த மே மாதம் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. இதில், 175 சட்டப்பேரவை தொகுதி, 25 மக்களவை தொகுதிகளில் எந்த கட்சிகள் எவ்வளவு செலவு செய்தது என்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்வருமான ஜெகன்மோகன், தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் மற்றும் போக்குவரத்து செலவுக்கு ₹9 கோடியே 72 லட்சத்து 21 ஆயிரத்து 727 செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், டிவி, நாளிதழ் மற்றும் எஸ்எம்எஸ் பிரசாரத்திற்காக 36 கோடியே 44 லட்சத்து 34 ஆயிரத்து 267, துண்டு பிரசுரம், பேனர்கள் மற்றும் கொடி கட்டுவதற்காக 1 கோடியே 3 லட்சத்து 21 ஆயிரத்து 514, பட்டாசு, மேடை அமைக்க 3 லட்சத்து 52 ஆயிரத்து 140, சட்டப்பூர்வமான ஆவணங்கள் சமர்ப்பிக்க 84 லட்சத்து 20 ஆயிரம், கிரிமினல் வழக்கு விவரங்களுக்காக 50 லட்சத்து 10 ஆயிரத்து 616 செலவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பிரசார வியூகம் வகுத்து செயல்பட்ட அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் குழுவினருக்கு 37 கோடியே 57 லட்சத்து 68 ஆயிரத்து 966 செலவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலுக்காக மட்டும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தம் 86 கோடியே  15 லட்சத்து 29 ஆயிரத்து 310 செலவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தெலுங்கு தேசம் கட்சியும் தேர்தலுக்காக 77 கோடியே 74 லட்சத்து 82 ஆயிரத்து 21 செலவு செய்துள்ளது.

Related Stories:

>