தங்கள் கடமையை செய்யும்போது நீதிபதிகள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் : தலைமை நீதிபதி கோகாய் அறிவுரை

புதுடெல்லி: ‘‘நீதிபதிகள் தங்கள் கடமையை செய்யும்போது, அமைதியை கடைபிடிக்க வேண்டும்,’’ என  உச் சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நாளையுடன் ஒய்வு பெறுகிறார். சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், அவருக்கு நேற்றுதான் கடைசி பணி நாள். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் வழக்கமான 1ம் எண் நீதிமன்றத்துக்கு ரஞ்சன் கோகாய் நேற்று வந்தார். புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கவுள்ள எஸ்.ஏ.பாப்டேவுடன் அமர்ந்து 4 நிமிடங்கள் பேசினார். பத்திரிகைகளுக்கு தனிப்பட்ட பேட்டி அளிப்பதை தவிர்த்த அவர்,  நிருபர்களுக்காக 3 பக்க கடிதத்தை வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் பின்பற்றப்படும் சுதந்திரத்தை நீங்கள் பாராட்டுவீர்கள் என நினைக்கிறேன். பேச்சு சுதந்திரம் வக்கீல்களுக்கானது. அதை அவர்கள் எல்லை வரை கொண்டு செல்லலாம். ஆனால், நீதிபதிகள் தங்கள் பணியை சுதந்திரமாக மேற்கொள்ளும்போது, அமைதியை கடைபிடிக்க வேண்டியுள்ளது. தேவைப்படும்போது மட்டும் நீதிபதிகள் பேசுகிறார்கள். கசப்பான உண்மை நினைவில் இருக்க வேண்டும். எனது பணிக்காலத்தில், நிருபர்களும் கனிவுடன் செயல்பட்டனர். சிக்கலான நேரங்களில் கூட, பொய்த் தகவல்களை வெளியிடாமல் ஊடகங்கள் பக்குவமாக நடந்து கொண்டன. உச்ச நீதிமன்றத்தின் நலன் கருதியே, ஊடகத்துடன் நெருக்கமாக இருக்கும் எண்ணம் எனக்கு ஒரு போதும் வரவில்லை. மக்களின் நம்பிக்கையால் பலம் பெற்ற அமைப்பை சேர்ந்தவனாக இருக்க நான் விரும்னேன். இந்த நம்பிக்கை, நீதிபதிகளாக நாங்கள் ஆற்றிய பணியால் கிடைத்தது. ஊடகம் மூலமாக அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: