ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைக்கு தண்ணீர் டிச.10க்குள் தமிழக அரசு பதிலளிக்க கெடு : தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி : ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நீரை தனியார் தொழிற்சாலைக்கு கொடுப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிற்கு டிசம்பர் 10ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கெடு விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் அணை, அப்பகுதியில் பல்வேறு கிராம விவசாயிகளுக்கு உயிர்நாடியாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் அணையில் இருந்து வரும் தண்ணீரை தனியார் நிறுவனங்கள் வியாபார நோக்கத்தில் எடுப்பதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பொதுமக்கள் உட்பட பல்வேறு சமூக ஆர்வலகர்கள் அனைவரும் பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட பிரச்னை காரணமாக வழக்கறிஞர் ஜோயல் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் உத்தரவில், “ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக மட்டுமே இனிமேல் நீர் எடுக்க வேண்டும் எனவும், கண்டிப்பாக தொழிற்சாலைக்கு எடுக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இதையடுத்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “அணையில் குடிநீருக்கு தேவையான தண்ணிர் உள்ளதா? என்று உறுதி செய்த பின்னர் வேண்டுமானால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தரலாம். இவை அனைத்தும் போக மீதமாக இருக்கும் பட்சத்தில் தனியார் தொழிற்சாலைகளுக்கு கொடுக்க முடியுமா? என்பது குறித்து பரசீலனை செய்து வழங்கலாம் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக வழக்கறிஞர் ஜோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தீர்ப்பாயம் மனுதாரரின் மேல்முறையீட்டுக்கு நவம்பர் 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த மாதம் 21ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீவைகுண்டம் அணை நீர் தொடர்பாக பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம் வழக்கை டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதற்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கெடு விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>