சாலையில் பேனர் வைக்கும் விவகாரம் ஒட்டு மொத்தமாக தடை கோரிய மனு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி : தமிழகத்தில் சாலையில் பேனர் வைக்கும் விவகாரத்தில் பாரபட்சம் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பரில் அ.தி.மு.க. நிர்வாகி ஜெயகோபால் மகன் திருமணம் நடந்தது. இதற்காக சாலையின் நடுவே மணமக்களை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டன. இதில் ஒரு பேனர் காற்றில் பறந்து, சாலையில் ஸ்கூட்டரில் சென்ற சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் மீது விழுந்தது. இதையடுத்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பேனர் வைப்பதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தமிழகத்தின் மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 11 மற்றும் 12ம் தேதி நடைபெற்றது.  இதில் இவர்களது வருகையின் போது வரவேற்பு பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறிப்பாக சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை மொத்தம் 14 இடங்களில் பேனர் வைக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் பேனர் வைப்பதற்கு அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை கடந்த மாதம் 16ம் தேதி தாக்கல் செய்திருந்தார். அதில்,”சாலைகளில் வைக்கப்படும் பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்களை தொடர்ந்து ஏற்படுத்தியதால் தான் அதற்கு தடை விதித்து ஏற்கனவே உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இந்த தடை என்பது அரசுக்கு பொருந்தாது என குறிப்பிடப்பட்டது. இதுபோன்ற உத்தரவு என்பது தவறான முன் உதாரணமாகும். அதனால், பேனர் வைக்கும் விவகாரத்தில் பாகுபாடு காட்டாமல் ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும்.

இதில் சென்னையில் அதிமுக பிரமுகர் ஒருவர் சாலையில் நடுவே வைத்திருந்த பேனர் விழுந்ததில் தான் நிலைதடுமாறிய சுபஸ்ரீ என்ற பெண் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டது.இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் வழக்கை நவம்பர் 15ம் தேதி விசாரிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் தலையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி வழக்கின் முக்கிய சாராம்சங்களை நீதிபதி முன்னிலையில் எடுத்துரைத்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,”இந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட சீன அதிபர் தமிழகம் வந்த பின்னர் அவரது நாட்டுக்கே திரும்பி சென்று விட்டார். அதனால் இது குறித்து விசாரிக்க எந்த முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: