ஒடிசா அரசு வெளியிட்ட புத்தகத்தில் சர்ச்சை திடீர் சம்பவத்தால் காந்தி உயிரிழந்தார் : முதல்வர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

புவனேஸ்வர்:  ‘தற்செயலாக நடந்த திடீர் சம்பவத்தால் மகாத்மா காந்தி உயிரிழந்தார்’ என பள்ளி மாணவர்களுக்கு ஒடிசா அரசு வழங்கிய கைப்பிரதியில் கூறப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தியின் போதனைகள், சேவைகள், ஒடிசா உடான அவருடைய தொடர்புகள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய 2 பக்க கைப்பிரதியை ஒடிசா கல்வி துறை தயாரித்துள்ளது.  ‘தேசப்பிதா ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட இந்த கைப்பிரதி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில், ‘டெல்லி பிர்லா இல்லத்தில் 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி திடீரென நடந்த தற்செயலான சம்பவங்களின் தொடர்ச்சியாக மகாத்மா காந்தி உயிரிழந்தார்,’ என்று கூறப்பட்டுள்ளது. அரசு சார்பில் வெளியிடப்பட்ட கைப்பிரதியில் இடம் பெற்றுள்ள முரணான இந்த தகவலுக்கு அரசியல் தலைவர்களும், அமைப்பு நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான நரசிங்க மிஸ்ரா கூறுகையில், “இந்த தவறு மன்னிக்க முடியாத ஒன்று. அரசுக்கு தலைமையேற்கும் மாநில முதல்வர் நவீன் பட்நாயக், கைப்பிரதியில் வெளியான இந்த தவறான தகவலுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், இந்த புத்தகங்களை உடனடியாக திரும்ப பெறவேண்டும். ஒவ்வொரு மாணவரும் மகாத்மா காந்தியை கொன்றது யார் என்பதை தெரிந்து கொள்வதற்கான உரிமையை பெற்றுள்ளனர்,” என்றார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆஷிஷ் கணுன்கோ கூறுகையில், “இதுபோன்ற செயல், வரலாற்றை திரிக்கும் மற்றும் உண்மையை மறைக்கும் அரசின் சதியின் ஒரு பகுதியாகும். நாதுராம் கோட்சே தான் காந்தியை கொன்றார் என்பது அனைவருக்கும் தெரியும். மாணவர்களுக்கு உண்மையை கூற வேண்டும். என்றார். இந்த சர்ச்சையை தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கைப்பிரதிகளை  கல்வித் துறை திரும்பப் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஸ் கூறுகையில், “இதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்,” என்றார்.

Related Stories: