நாசிக்கில் பரபரப்பு 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு

நாசிக்: நாசிக் மாவட்டத்தில் 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவனின் பெயர் ரிதேஷ் ஜவான்சிங் சோலங்கி ஆகும். இந்த சிறுவன் நாசிக் மாவட்டம், கல்வான் தாலுகாவில் உள்ள பேஜ் கிராமத்தை சேர்ந்தவர் ஜவான்சிங் சோலங்கி. இவரது மகன் ரிதேஷ்(6). இவனது பெற்றோர் விவசாயிகள் ஆவர். நேற்று முன்தினம் காலை ரிதேஷ் மற்ற சிறுவர்களுடன் பேஜ் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திறந்து கிடந்த ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து விட்டான். இந்த கிணறு 200 அடி ஆழமானது. இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 3 மணி நேரத்தில் மீட்பு படையினர் ரிதேஷை பத்திரமாக கிணற்றில் இருந்து மீட்டனர்.

இந்த ஆழ்குழாய் கிணறு 200 அடி ஆழமானது என்றாலும், ரிதேஷ் 50 அடி ஆழத்தில் சிக்கியிருந்ததாக அதிகாரிகள் கூறினர். மேலும் அவன் சுயநினைவுடன் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மீட்பு படையினர் ஒரு கயிற்றை கிணற்றினுள் இறக்கினர். ரிதேஷ் அந்த கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டான். மீட்பு படையினர் அந்த கயிற்றை மேலே இழுத்து ரிதேஷை காப்பாற்றினர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதும், மருத்துவ பரிசோதனைக்காக ரிதேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள் ரிதேஷ் ஆரோக்கியமாக இருப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து ரிதேஷ் வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.

Related Stories: