சபரிமலை விவகாரத்தில் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக படிக்க வேண்டும் : உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் அறிவுரை

புதுடெல்லி: ‘சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக படித்து  பார்க்க வேண்டும்,’’ என உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் அறிவுறுத்தி உள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதில், தலைமை நீதிபதி கோகாய், நீதிபதிகள் கான்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர், வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாற்ற உத்தரவிட்டனர். மற்ற இரு நீதிபதிகளான நாரிமன், சந்திராசூட் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். குறிப்பாக, நாரிமன் தனது தீர்ப்பில், ‘பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்வது அவர்களின் அடிப்படை உரிமையாகும். எனவே, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். இதில் எந்த சமரசமும் செய்யப்படக் கூடாது’ என்று உத்தரவிட்டு, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.

ஆனால், 3:2 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சபரிமலை வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு நேற்று நீதிபதிகள் நாரிமன், ரவீந்திரபட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி நாரிமன், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், ‘‘சபரிமலை வழக்கில் நேற்று வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்பை அரசு முக்கியமாக படித்து பார்க்க வேண்டும். இதைப் பற்றி தயவு செய்து அரசுக்கு தெரியப்படுத்துங்கள்,’’ என்றார். வேறொரு வழக்கு விசாரணையின் போது சபரிமலை விவகாரத்தை நீதிபதி குறிப்பிட்டு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: