உச்சகட்ட பாதுகாப்புடன் இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் : மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

கொழும்பு: இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதற்காக உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் இன்று நடக்க உள்ளது. கடந்த 1982ம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது பதவியில் உள்ள அதிபர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் என யாருமே போட்டியிடாமல் அதிபர் தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை. தேர்தலையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்களை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 200க்கும் மேற்பட்டவர்களை கொன்றதால், இலங்கை மக்கள் இப்போதும் ஒருவித பீதியுடனே உள்ளனர். இதனால், வாக்குப்பதிவு மையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய வாக்குப்பதிவுக்காக நாடு முழுவதும் மொத்தம், 12,845 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 1 கோடியே 59 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில், முதல், 2வது, 3வது என வேட்பாளர்களை வரிசைப்படுத்தி வாக்களிக்க வேண்டும். இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடையும். அதன் பிறகு உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. ஆனாலும், இம்முறை வேட்பாளர்கள் அதிகம் என்பதால், திங்கட்கிழமை தான் உறுதியான இறுதி முடிவு தெரியவரும் என தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர். இத்தேர்தலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட இந்தியா, மலேசியா, பூடான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

35 வேட்பாளர்கள்

இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில், இம்முறை அதிகபட்சமாக அதிபர் தேர்தலில் 35 பேர் போட்டியிடுகின்றனர். இதில், இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளரும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அனுரா குமாரா திஸ்சனயாகேவும் செல்வாக்குமிக்க வேட்பாளராக உள்ளார்.

கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு?

இலங்கையில் கோத்தபய ராஜபக்சே 10 ஆண்டுகள் ராணுவ அமைச்சராக பதவி வகித்தவர். இவரது பதவிக்காலத்தில் தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. தற்போது ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இலங்கையில் தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் காரணமாக, கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

Related Stories: