நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் பாரபட்சம் என புகார் அமைச்சர் வீரமணி-திமுக எம்எல்ஏ கடும் வாக்குவாதம்: நாற்காலிகள் வீசப்பட்டதால் பரபரப்பு

அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் சிறப்பு குறைதீர்வு மனுக்கள் மீதான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு 1,050 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  விழாவில், தொகுதி திமுக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் பேசுகையில், ‘சட்டமன்ற உறுப்பினரான என்னிடம் வழங்கிய மனுக்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கவில்லை. முதல்வரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பலருக்கு  அரசு ஆணை பிறப்பித்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை’ என்று குறிப்பிட்டு கொண்டிருந்தார்.  உடனே மேடையில் இருந்த ஆவின் தலைவர் வேலழகன், ‘முதல்வரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுதான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் பிரச்னை செய்ய வேண்டாம்’ என்றார். அதேபோல் வீரமணியும், ‘நன்றாக பேசிக் கொண்டிருந்துவிட்டு எதற்காக பிரச்னை செய்கிறீர்கள்?’ என்று கேட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது வேலழகன் ஆதரவாளர்களும், திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில நிமிடத்தில் இருதரப்பு ஆதரவாளர்களும் நாற்காலிகளை தூக்கி வீசினர். இதனால் விழாவில் கலந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள், பணியாளர்கள் பதற்றமடைந்தனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் பேசும்போது, ‘சம்பந்தப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று உறுதிஅளித்தார். இதன்பின் அமைச்சரும்  விடுபட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த பரபரப்புக்கு இடையே அமைச்சர் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் சலசலப்பு காணப்பட்டது. இதுதொடர்பாக எம்எல்ஏ நந்தகுமார் கூறியதாவது: விழாவில், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. ஆனால் திமுக சார்பில் ஊராட்சி சபா கூட்டங்கள் நடத்தப்பட்டு தொகுதி மக்கள் என்னிடம் தந்த 700க்கும் மேற்பட்ட முதியோர் ஓய்வூதிய மனுக்களில் 110 மனுக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது. 350 மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டது. மீதி தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதை நான் கேட்டதும் விளம்பரத்துக்காக இதுபோன்று மேடையில் செய்வதாக அமைச்சர் வீரமணி என்னை பார்த்து கூறினார். நான் தொகுதி எம்எல்ஏ, மக்களுக்காக கேட்பது என் வேலை. விளம்பரத்துக்காக இதை செய்யவில்லை என்றேன். அப்போது அதிமுக ஒன்றிய செயலாளரும் ஆவின் சேர்மனுமான வேலழகன் மைக்கை ஆப் செய்தார். அதன்பிறகு 10 நிமிடங்கள் பேசிய அமைச்சர், எனது கேள்விகள் எதற்கும் பதில் தரவில்லை என்றார்.

Related Stories: