மத்தியஅரசு அனுமதி, மாநில அரசு அலட்சியம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 11,000 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடம்: டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் பாதிப்பு

உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளின்படி 5 ஆயிரம் பேருக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட வேண்டும். இவர்களின் முக்கியபணியாக டெங்கு, காலரா, சிக்குன் குனியா தடுப்பு, கொள்ளை நோய் தடுப்பு போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

தமிழகத்தில் 1987ம் ஆண்டில் 11 ஆயிரத்து 500 சுகாதார ஆய்வாளர்கள் இருந்தனர்.  அப்போது மக்கள் தொகை 4 கோடி,  தற்போது மக்கள் தொகை இருமடங்காகியுள்ளது.  ஆனால் தற்போதைய சுகாதார ஆய்வாளர்கள் 3,000 பேர் தான் இருக்கின்றனர். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஆள்குறைப்பு உத்தரவால் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற நிலையை மாற்றி 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளரை நியமிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். இதிலும் நிலை ஒன்று, நிலை இரண்டு என இரு பிரிவுகளாக பணி செய்து வந்தனர்.  தற்போது தமிழ்நாட்டில் 8000க்கும் அதிகமான சுகாதார ஆய்வாளர்கள் தேவைப்படும் இடத்தில், 5700 பணி இடங்களாக குறைக்கப்பட்டது.  இந்நிலையில் மீண்டும் அப்பணியிடங்கள் குறைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி இன்னும் 334 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 9000 துணை சுகாதார நிலையங்களும், 1750 ஆரம்ப சுகாதார நிலையங்களும் இருக்கின்றன. இவ்விடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்கள் கடந்த பத்தாண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால்தான் முழுமையாக டெங்குவை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது டெங்குகாய்ச்சல் தடுப்புப்பணிகளில் இவர்களின் பங்கு  முக்கியமானதாக இருக்கிறது. ஆட்கள் பற்றாக்குறையால் விடுப்பு எடுக்காமல், நேரம் காலம் பார்க்காமல் சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்க மறுக்கிறது.  சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் ஒரே ஆய்வாளர் 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுகாதார பணிகளை மேற்கொள்வது மிகுந்த சிரமமாக உள்ளதாகவும், பணிநேரத்தை ஒழுங்குபடுத்தவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சிவகுரு கூறுகையில், தமிழகஅரசு சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை, 5,700 ஆக குறைத்து பின்னர், 4,311 தற்போது 3,403 பணியிடமாக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனால் வாரம் ஒருமுறை கிராமங்களுக்கு  செல்லும் சுகாதார ஆய்வாளர்கள், இனிவரும் காலங்களில் மாதம் ஒருமுறைக்கூட செல்லமுடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இடைபட்டகாலத்தில் அந்த கிராமங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை உடனடியாக தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு கிராமங்களுக்கு சென்று சோதனை செய்வதன் மூலம் அறிகுறிகள் இருந்தால் முன்கூட்டியே மருந்து,மாத்திரைகளை வழங்கி குணப்படுத்தினோம். ஆனால் இன்று மருத்துவமனைகளுக்கு தினமும் கூட்டம் குவிகிறது என்றால் அரசின் தவறான முடிவுதான் காரணம். உலக சுகாதார நிறுவன உத்தரவின்படி தமிழகத்தில் 11 ஆயிரம் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிட, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மாநில அரசு இருக்கின்ற பணியிடங்களை குறைத்துள்ளது. தமிழக அரசின் ஆட்குறைப்பு அரசாணையை ரத்து செய்யக்கோரி நாங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டோம். சுகாதார ஆய்வாளர் பற்றாக்குறையால் புதுப்புது நோய்கள் ஏற்படுகிறது. அதிகளவிலான பொதுமக்கள் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழக அரசு காரணமாகாமல் இருக்க 11 ஆயிரம் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை பூர்த்தி செய்திட வேண்டுமென கூறினார்.

Related Stories: