பாதாள சாக்கடை சுத்தப்படுத்திய தொழிலாளி பலி குடந்தை நகராட்சி ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

கும்பகோணம்: விஷவாயு தாக்கி துப்புரவு ெதாழிலாளி பலியான சம்பவத்தில் நகராட்சி ஆணையர், நகர்நல அலுவலர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சாதிக்பாட்ஷா (50), வீரமணி,  வீபூதரன், ராஜா ஆகிய 4 பேர் நேற்றுமுன்தினம் மாலை பாதாள சாக்கடை மேன்ஹோலில் அடைப்புகளை சீர் செய்யும் பணியில்  ஈடுபட்டனர். அப்போது மேன்ஹோலுக்குள் டியூப் செல்லவில்லை. இதனால் மேன்ஹோலுக்குள் குனிந்து சாதிக்பாட்ஷா பார்த்தபோது நிலை தடுமாறி பாதாள சாக்கடை மேன்ஹோலுக்குள் விழுந்தார்.  

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களிடம் மற்ற துப்புரவு தொழிலாளர்கள் கூறினர். உடனே அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது பாதாள சாக்கடை மேன்ஹோலுக்குள் சாதிக்பாட்ஷா இறந்து கிடந்தது தெரியவந்தது. இரவு 9 மணி வரையிலும் எந்த அதிகாரியும் வந்து உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கும்பகோணம் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாதிக்பாட்ஷாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாதிக்பாட்ஷாவின் தாயார் பாத்திமாபீவி கும்பகோணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நகராட்சி ஆணையர்(பொ) ஜெகதீசன், நகர்நல அலுவலர் பிரேமா, சூப்பர்வைசர் பிரசாந்த், கான்ட்ராக்டர் வீரமணி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: