நதி, ஓடையின் குறுக்கே ரூ1000 கோடியில் தடுப்பணை கட்டுவது குறித்து ஆலோசனை: முதல்வர் எடப்பாடி தகவல்

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ.500 கோடியில் 1,829 ஏரிகள் குடிமராத்து திட்ட  பணிகள் நடைபெற்றதாகவும், நதி, ஓடையின் குறுக்கே ரூ.1000 கோடியில் தடுப்பணை  கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுப்பணி துறை கட்டிடங்கள் மற்றும் நீர்வள ஆதாரத்துறை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைத்தல் கழகத்தின் தலைவர் சத்யகோபால், தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் திட்ட இயக்குநர் விபு நய்யர், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டிடம்) ராஜமோகன், நீர்வள ஆதாரத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் பொதுப்பணி துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பருவ காலங்களில் பெய்து வரும் மழைநீர் முழுவதும் சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு திட்டமாக, மக்களோடு மக்கள் இயக்கமாக குடிமராமத்து திட்டம் கடந்த மூன்றாண்டுகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டும், சுமார் ரூ.500 கோடியில் 1829 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, இன்றைக்கு பல ஏரிகளுடைய பணிகள் நிறைவு பெற்று இருக்கின்றன. சில இடங்களில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதுபோல பல திட்டங்கள் குறிப்பாக தடுப்பணைகள், மூன்றாண்டு கால திட்டமாக ஆயிரம் கோடி ரூபாயில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்தோம். அதன் வாயிலாக அந்த பணிகள் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கின்றன. அதன் விவரத்தையும், அதேபோல் நதியின் குறுக்கே, ஓடையின் குறுக்கே, தடுப்பணை கட்டுவதற்காக அறிவிக்கப்பட்ட அந்த திட்டத்தையும் எவ்வாறு நடைபெற்று கொண்டு இருக்கிறது என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முதல்வர் அறிவித்த குடிமராமத்து திட்டத்தின் மூலம்  `தண்ணீரில் தன்னிறைவு - தலைநிமிரும் தமிழகம்’’ என்ற சிறப்பு மலரை முதல்வர்  எடப்பாடி வெளியிட பொதுப்பணி துறை செயலாளர் மணிவாசன் பெற்றுக்கொண்டார்.

Related Stories: