×

பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சிலைகள் மீட்பு அறிக்கைபற்றி விசாரிக்க சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

சென்னை: சிலைகள் மீட்கப்பட்டது தொடர்பாக, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகள் குறித்து விசாரிக்க தனி குழுவை அமைக்கும்படி சிபிசிஐடிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கொரட்டூரை சேர்ந்த சேகர் ராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல்,  நீதிமன்றத்தில் பல ஆதாரமற்ற தகவல்களை தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளார். அதன் அடிப்படையிலேயே அவர் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார். கடந்த 2018ல் பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 2012 முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தன் தலைமையிலான குழு 26 வழக்குகளை பதிவு செய்து 102 நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை 1,125 சிலைகளை மீட்டுள்ளதோடு, 1,106 சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது தடுத்துள்ளதாகவும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 8 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த சிலைகள் உண்மையிலேயே கடத்தப்பட்ட சிலைகள்தானா என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை என தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சம்பந்தப்பட்ட சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது என்று கேட்டபோது, இதுதொடர்பான தகவல்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கொடுக்க மறுத்து விட்டது. பொன்.மாணிக்கவேல் மீட்டதாக கூறப்படும் சிலைகளை சம்பந்தப்பட்ட கோயில்களிடம் திருப்பி ஒப்படைக்காமல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திலேயே வைத்திருப்பதன் மூலம் அதன் உண்மைத்தன்மை குறித்தும் பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கை குறித்தும் சந்தேகம் எழுகிறது. எனவே, இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து விரிவான விசாரணை செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்யுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.

Tags : CBCID ,recovery ,court ,Gold.Manichael ,High Court , Pon.Manikawel, Statues Recovery Report, CBCID
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...