5 புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கும் கலெக்டர்களை நியமித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதில் உத்தரவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக கிரண் குராலா, தென்காசி மாவட்ட கலெக்டராக ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக ஏ.ஜான் லூயிஸ், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக  எம்.பி.சிவனருள், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக எஸ்.திவ்யதர்ஷினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது 5 மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.  அவர்கள் தான் மாவட்டம் பிரிப்பு சம்பந்தமான பணிகளை கவனித்து வந்தனர். தற்போது அவர்களே அந்தந்த மாவட்டங்களுக்கு கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு பணியில் சேலம் முன்னாள் கலெக்டர் ரோகிணி

தமிழ்நாடு இசை, கவின், கலை பல்கலைக்கழக பதிவாளராக இருந்த ரோகிணி ஆர்.பாஜிபாகரே மத்திய அரசு பணிக்கு சென்றுள்ளார். அதாவது, மத்திய அரசின் உயர் கல்வித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகிணி இதற்கு முன்னர் சேலம் மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். மக்களவை தேர்தலில் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பிரசாரத்தின் போது விதிமுறை மீறி அதிக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சேலம் மாவட்ட எஸ்பிக்கு கலெக்டர் ரோகிணி பரிந்துரைத்தார். இந்த தகவல் முதல்வருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் முடிந்ததும் கலெக்டர் ரோகிணி அதிரடியாக மாற்றப்பட்டார்.

Related Stories: