மகள் செல்போனில் பதிவு செய்த வாக்குமூலம் அடிப்படையில் ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை உடனடியாக கைது செய்ய வேண்டும்: கொலை செய்யப்பட்டுள்ளதாக தந்தை குற்றச்சாட்டு

சென்னை: சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமாவின் மரணத்துக்கு காரணமான பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மாணவியின் தந்தை கூறியுள்ளார். இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கிண்டி, ஐஐடியில் கேரள மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் (18) படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள சரவியூ விடுதி அறை எண் 349ல் தங்கியிருந்து, மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு படித்தார். கடந்த 9ம் தேதி இரவு விடுதியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் செல்போனில் தற்கொலைக்கான காரணத்தை எழுதியிருப்பது தெரிந்தது. சில ஐஐடி பேராசிரியர்களின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மாணவியின் தந்தை புகார் செய்தார். பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடியிடம் புகார் செய்தார். தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக ஐஐடி சென்று விசாரணை நடத்தினார். பின்னர் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

 

இந்நிலையில், மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக டிஜிபி திரிபாதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை நேரடியாக சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் அப்துல் லத்தீப் நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகள் பாத்திமா அனைத்து தேர்விலும் முதலிடம் பிடிக்கும் அளவிற்கு திறமையான மாணவி. குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தற்கொலை செய்துகொள்பவர் அல்ல. ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தொடர்ந்து துன்புறுத்தியதே என் மகள் சாவுக்கு காரணம். இந்த மரணத்தில் நிச்சயமாக மர்மம் ஒளிந்திருக்கிறது. குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை கண்டுபிடித்து தமிழக காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். மரணத்திற்கு காரணமான சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதே முதல் வேண்டுகோள். என் மகள் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தாலும் அதை எழுதிவைக்கும் பழக்கமுள்ளவர். தற்கொலைக்கு முன்பும் அதுதொடர்பாக அவர் நிச்சயம் கடிதம் எழுதியிருப்பார். மகளின் தற்கொலை தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் ஐஐடியை சேர்ந்த நிர்வாகிகள் மறைத்து விட்டனர். மேலும் முதல் தகவல் அறிக்கையில் கூட மகளின் கடிதம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மகள் இறக்கும் நாளுக்கு முந்தைய நாள் இயல்பாக அவள் செய்யும் எதையும் செய்யவில்லை. அன்றைய தினம் இரவு விடுதி உணவகத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுதுகொண்டிருந்த அவரை மூக்குத்தி அணிந்திருந்த ஒரு பெண் சமாதானப்படுத்தியுள்ளார். அந்த பெண்மணி யார் என காவல்துறை கண்டறிய வேண்டும். எனது மகள் அன்றைய சம்பவங்கள் குறித்து அவரிடம் பகிர்ந்திருக்கக்கூடும். எல்லா தேர்விலும் முதலிடம் பிடிக்கும் எனது மகள் அன்றைய தினம் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனுக்கு பயந்தே தனது லாஜிஸ்டிக்ஸ் விடைத்தாளை வாங்க தோழியை அனுப்பியுள்ளார். முதல் மதிப்பெண் பெறும் எனது மகளின் விடைத்தாளில் மதிப்பெண் குறைத்ததை தட்டிக்கேட்டுள்ளார். அதில் எனது மகளுக்கும் அந்த பேராசிரியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சில பிரச்னைகள் அரங்கேறியுள்ளது.

மகளின் மரணம் தொடர்பாக விசாரிக்க சிசிடிவி காட்சிகளையோ தூக்கில் தொங்கிய கயிறு தொடர்பான விவரங்களையோ ஐ.ஐ.டி நிர்வாகம் தராமல் மழுப்புவது ஏன். தூக்கில் தொங்க கயிறு எப்படி கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், ஆதாரங்கள் மறைக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக காவல்துறைக்கும் ஐஐடி நிர்வாகத்துக்கும் இடையில் சில பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதன் காரணமாகவே, எந்த ஒரு ஆதாரங்களும் மகளின் அறையில் கண்டெடுக்கப்படவில்லை.

கடவுளின் கிருபையால் செல்போன் பதிவுகள் எனக்கு கிடைத்தது. அதன் காரணமாகவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இத்தனை திறமைகள் நிறைந்த ஒரு மாணவி இறந்த பின்பும் ஐ.ஐ.டி நிர்வாகம் எனக்கும் எனது மனைவிக்கும் அனுதாபம் தெரிவிக்கவில்லை. ஆறுதலாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனது மகள் கொல்லப்பட்டாரா இல்லை தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்பதை தமிழக காவல்துறையினர் கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மரணத்தில் மர்மம்

ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘பாத்திமா மரணம் தற்கொலை அல்ல, அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது. அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்துவதில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன’’ என கூறியுள்ளார்.

Related Stories: