×

கோயில் நடை இன்று திறப்பு சபரிமலையில் திடீர் பதற்றம்: பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க கேரள அரசு மறுப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற முந்தையை தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்த பரபரப்பான சூழ்நிலையில், கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. அதே நேரம், கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என கேரள அரசு அறிவித்து இருப்பதால் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம்,’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 28ல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன  அமர்வு  உத்தரவிட்டது. தொடர்ந்து இளம்பெண்கள் சபரிமலை சென்றதால் ேகரளாவில் கலவரம் வெடித்தது. இது  தொடர்பாக 55,650 பேர் மீது 1100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  2200 பேர்  சிறையில் அடைக்கப்பட்டனர். வரலாறு காணாத  சம்பவங்களால் கடந்த  மண்டல, மகர விளக்கு காலத்தில் சபரிமலைக்கு வந்த  பக்தர்களின் எண்ணிக்கை  குறைந்தது. இதனால் கோயில் வருமானமும் வெகுவாக குறைந்தது.

இந்நிலையில், இளம் பெண்களை   அனுமதிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல்   செய்யப்பட்டது. இதை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த   விசாரணையை 7 பேர் கொண்ட அமர்வுக்கு நேற்று முன்தினம் மாற்றியது. ஆனால், கடந்தாண்டு உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை. இதனால், இந்த ஆண்டும் மண்டல காலத்தில் இளம்பெண்கள் சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், இளம்பெண்கள் சபரிமலை செல்வதற்கு கடந்தாண்டு ஆதரவு அளித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட தற்போது தங்கள் நிலையை மாற்றிக் கொண்டுள்ளன. பாஜ மற்றும் இந்து அமைப்புகள் வழக்கம்போல் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், இந்தாண்டும் பெண்கள் சபரிமலைக்கு வந்தால் பெரியளவில் வன்முறைகள் வெடிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், கடந்தாண்டு  சபரிமலைக்கு வந்த பெண்களுக்கு பாதுகாப்பு அளித்த கேரள மாநில அரசும், இந்தாண்டு தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. இது குறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ இளம் பெண்கள் யாராவது சபரிமலைக்கு வர விரும்பினால், நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்கி வரவேண்டும். திருப்தி தேசாய் போன்ற பெண்ணியவாதிகள் தங்களது வலிமையை நிரூபிக்க வேண்டிய இடமாக சபரிமலையை கருதக் கூடாது. இந்த ஆண்டு சபரிமலை வர விரும்பும் இளம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திட்டம் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நீதித்துறையை சேர்ந்தவர்கள் கூட இருவேறு கருத்துக்களை கூறுகின்றனர். இளம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற பழைய தீர்ப்பு செல்லாது என்று சிலர் கூறுகின்றனர். அந்த தீர்ப்பு அமலில் உள்ளதாக வேறு ஒரு தரப்பினர் கூறுகின்றனர். உச்ச நீதிமன்றம் தான் இதை ெதளிவுபடுத்த வேண்டும்,’’ என்றார். கேரள  சட்ட அமைச்சர் பாலன் கூறுகையில், ‘‘கடந்த முறை  தரிசனத்துக்கு வந்த  இளம் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்ததால்தான்  பிரச்னை ஏற்பட்டதாக  பலரும் கூறுகின்றனர். இதனால், இந்தாண்டு தரிசனத்துக்கு  வரும் இளம்  பெண்களுக்கு போலீஸ் எந்த பாதுகாப்பும் அளிக்காது. ஆனால்,  விரும்பும்  பெண்கள் தரிசனத்துக்கு செல்லலாம்,’’ என்றார்.

இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே சபரிமலை கோயில்  நடை, மண்டல கால பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் மகேஸ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறப்பார். வேறு சிறப்பு பூஜைகள் நடக்காது. இன்று மாலை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி மற்றும் மாளிகப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பு ஏற்பார்கள். நாளை காலை புதிய மேலசாந்திகள் கோயில் நடையை திறப்பார்கள். தொடர்ந்து மண்டல கால பூஜைகள் தொடங்கும். சபரிமலையில் இந்தாண்டு தரிசனம் செய்வதற்காக ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள அரசு கூறிவிட்டதாலும், கோயிலுக்கு வரும் பெண்களை தடுக்கப் போவதாக பாஜ மற்றும் இந்து அமைப்புகள் அறிவித்து இருப்பதாலும், சபரிமலையில் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக, அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கேரள அரசு பல அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Tags : Kerala ,government ,women ,Sabarimala , Temple Walk, Sabarimala, Women, Defense, Kerala Government
× RELATED டி.டி.யில் கேரளாவை தவறான விதத்தில்...