அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்து விபத்து கோவை இளம்பெண் இடதுகால் அகற்றம்: ரத்தநாளம் அடைபட்டதால் டாக்டர்கள் நடவடிக்கை

கோவை: கோவையில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணின் இடதுகால் அகற்றப்பட்டது. ரத்தநாளம் அடைக்கப்பட்டதால் டாக்டர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம்தேதி சென்னையில் இருந்து விமானத்தில் கோைவ வந்தார். அவரை வரவேற்று, அவினாசி ரோட்டில் பல இடங்களில் சாலையோரம் அ.தி.மு.க. கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருந்தது. அன்றையதினம், பீளமேடு கோல்டு வின்ஸ் பகுதியில் சாலையோரம் நடப்பட்டிருந்த 15 அடி உயர சவுக்கு கொடிக்கம்பம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. அப்போது அவ்வழியாக லாரியை ஓட்டி வந்த டிரைவர், லாரி மீது கொடிக்கம்பம் விழாமல் இருக்க லாரியை சற்று திருப்பினார். அப்போது அவ்வழியாக மொபட்டில் சென்ற ராஜேஸ்வரி (22), பைக் ஓட்டி வந்த விஜய் ஆனந்த் ஆகியோர் மீது லாரி மோதியது. இதில் ராஜேஸ்வரி கீழே விழுந்தார். லாரியின் சக்கரம் ராஜேஸ்வரி காலில் ஏறி இரு கால்களும் நசுங்கியது. இதேபோல விஜய் ஆனந்த் காயமடைந்தார்.  விஜய் ஆனந்த் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ராஜேஸ்வரி, கோவை நீலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனம் எழுந்தது.

இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முருகனை (53) கைது செய்தனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகே கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருந்தது. தனியார் கடை முன் இருந்த அந்த ேகமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்துள்ளனர். அதில் கொடிக்கம்பம் தொடர்பான காட்சிகள் பதிவாகி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த காட்சிகள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ராஜேஸ்வரியின் காலில் ரத்தநாளம் அடைபட்டு, ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் அவரது இடதுகாலை, முட்டியில் இருந்து அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று இரவு அவரது இடதுகால், முட்டியில் இருந்து முழுவதுமாக அகற்றப்பட்டது.  அவர், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இச்செய்தியை கேள்விப்பட்டு, மருத்துவமனை வளாகத்தில் இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

ஆண்டவன் தான் காப்பாத்தணும் பெற்றோர் கண்ணீர்

ராஜேஸ்வரி பெற்றோர் கூறுகையில், ‘‘எங்கள் மகள் நல்ல நிலையில் மீண்டு வருவாள் என நம்பினோம்; அவளது நிலையை  பார்க்கும் போது நிலைகுலைந்து விட்டோம்; அவள் நிலைமை எங்கள் குடும்பத்தை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது. எனவே, நாங்கள் யாரிடமும் எதையும் பேச விரும்பவில்லை. எங்களை ஆண்டவன் தான் காப்பாத்தணும்; தைரியத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்’’ என கண்ணீர் மல்க கூறினார்கள்.

Related Stories: