×

பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: கவர்னருடன் தலைவர்கள் இன்று சந்திப்பு

மும்பை: ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் நேற்று தலைகீழ் திருப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதை சிவசேனா உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக, மூன்று கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாநில ஆளுநரை இக்கட்சி தலைவர்கள் கூ்டடாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டமிட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 288 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் ேததி நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பா.ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும், காங்கிரசுக்கு 44 இடங்களும் கிடைத்தன. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க பா.ஜனதா மறுத்ததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி விடுத்தார். ஆனால், யாருக்கும் பெரும்பான்மை பலம் இல்லாததால் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. எனினும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் சிவசேனா தீவிரமாக இறங்கியது. இதன் அடிப்படையில், இம்மாநில அரசியலில் நேற்று தலைகீழ் திருப்பம் ஏற்பட்டது. முதல்வர் பதவி, துணை முதல்வர் பதவிகள், அமைச்சர்கள் பதவிகளை பிரித்துக் கொள்வதில் இக்கட்சிகளுக்கு ஒருமனதான உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இது பற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் நேற்று அளித்த பேட்டியில், ‘‘புதிய அரசில் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார்,’’ என்றார். மேலும், இந்த கூட்டணி ஆட்சியில் காங்கிரசும் பங்கு பெறும் என்றும் அவர் உறுதி செய்தார். இதற்கிடையே, விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கோரியுள்ளன. காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் கூறும்போது, “மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்த பருவம் தவறிய மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாநில ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். நேரம் ஒதுக்கப்பட்டால் நாளை (இன்று) ஆளுநரை சந்திப்போம். விவசாயிகள் பிரச்னை பற்றி பேசுவதற்காக மட்டுமே ஆளுநரை சந்திக்கிறோம். மாநிலத்தின் அரசியல் குறித்து பேசுவதற்காக அல்ல,” என்றார். இந்த குழுவில் சிவசேனாவும் இடம் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோருவது பற்றியும் இக்கட்சிகள் பேசக்கூடும் என தெரிகிறது.

எத்தனை அமைச்சர்கள்?

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பது என்பதை காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் முடிவு செய்துள்ளன.  இதனால், புதிய ஆட்சியமைப்பதில் இனி சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு தலா 14 அமைச்சர் பதவிகளும், காங்கிரசுக்கு 12 அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை பிரதிநிதித்துவத்தில் சிவசேனா இந்த பார்முலாவைத்தான் முன்வைத்திருப்பதாகவும் இதனை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags : Leaders ,Congress ,Shiv Sena ,Pawar ,Nationalist Congress Party , Nationalist Congress, Shiv Sena, Congress, Governor
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை