×

திருச்சி பெல் ஆஸ்பத்திரியில் குழப்பம்: ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய் போட்டி... டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு

திருச்சி: இஸ்ரேல் மன்னன் சாலமோன் அவையில் நடந்த வினோத வழக்கு இன்று திருச்சி பெல் ஆஸ்பத்திரிக்கும் வந்து விட்டது. அன்று அவைக்கு கொண்டு வரப்பட்ட ஒரே ஆண் குழந்தைக்கு 2 தாய்கள் உரிமை கொண்டாடினர். மன்னனாக இருந்தால் அன்று புத்திசாலித்தனமாகவும், அதிரடியாகவும் முடிவு எடுத்து தீர்வு கண்டார் சாலமோன். இன்று 2 ஆண் குழந்தை இருக்கிறது. இதில் ஒரே ஒரு குழந்தைக்கு தான் 2 தாய்கள் உரிமை கோருகிறார்கள். இன்னொரு குழந்தைக்கு 2 தாய்களும் உரிமை கோரவில்லை. இதுபற்றிய விவரம் வருமாறு: திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட ஆஸ்பத்திரி உள்ளது.

இங்கு பணியாற்றும் ஊழியர்கள், அவரது குடும்பத்தினர் இங்கு சிகிச்சை பெறலாம். பெல் குடியிருப்பை சேர்ந்த இரு நிறைமாத கர்ப்பணிகள் இங்கு அனுமதிக்கப்பட்டனர். அவரில் ஒருவருக்கு கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. இன்னொரு பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. இரு தாய்களும், குழந்தைகளும் அடுத்தடுத்த படுக்கையில் இருந்தனர். நேற்று இரவு ஆஸ்பத்திரி நர்ஸ்கள் படுக்கையை சுத்தம் செய்தபோது குழந்தை மாறி விட்டதாக புகார் எழுந்தது. அதாவது இரு தாய்களும் ஒரே ஆண் குழந்தையை தன் குழந்தை என்கிறார்கள். இன்னொரு ஆண் குழந்தையை இருவரும் ஏற்க மறுக்கிறார்கள்.

உடனடியாக தீர்ப்பு கூற முடியாதபடி இரு குழந்தைகளுக்கும் ஒரே ரத்த வகை. ஒரே எடை. இதனால் அதிகாரிகள் வரை பிரச்னை போனது. தொழிற்சங்கத்தினர் வரவழைக்கப்பட்டனர். பிரச்னையை பெரிதாக்க வேண்டாம். டிஎன்ஏ டெஸ்ட்க்கு உடனே ஏற்பாடு செய்கிறோம். அதுவரை இப்போது அவரவரிடம் இருக்கும் குழந்தையை வழக்கம்போல தாய்ப்பால் ஊட்டி பராமரித்து வாருங்கள். டிஎன்ஏ முடிவில் உறுதி ஆகி விடும் என சமாதானம் செய்தனர். ஆனாலும் ஒரு குழந்தையின் நிலை மிகவும் பரிதாபமாகி விட்டது. அந்த குழந்தையை ஏற்க மறுக்கும் தாய்வேண்டா வெறுப்பாக பால் கொடுக்கிறாராம். இந்த பிரச்னை வெளியே தெரிய வேண்டாம் என நிர்வாகம் மூடி மறைத்தபோதும் பிரச்னை வெளியே வந்து விட்டது.

Tags : baby boy ,match ,Trichy Bell Hospital: Mother ,Trichy Bell Hospital , Trichy Bell Hospital, Male Child, 2 Mother Competition
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...