×

கும்பாற்றில் நிரந்தர பாலம் அமைக்க கோரிக்கை

மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட கடையால் பேரூராட்சி களியல் வனச்சரகத்துக்கு உட்பட்ட வேலிப்பிலாம், கோலஞ்சிமடம் பழங்குடியின காணி மக்கள் வசிக்கும் மலைப்பகுதி. ேமற்கு தொடர்ச்சி மலை பகுதியான இங்கு 130க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் கேரள, தமிழக வன எல்லைப்பகுதியாகவும் உள்ளது. இப்பகுதியில் கும்பாறு ஓடுகிறது. இது இக்கிராமத்தின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது. ஆனால் மழைக்காலங்களில் கும்பாற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும்போது பொதுமக்கள் போக்குவரத்துக்கு கடும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. கும்பாற்றின் குறுக்கே மரத்தடிகளை போட்டு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது வழியாகத்தான் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் கடந்து செல்வது வழக்கம். ஆனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது தற்காலிக பாலம் அடித்து செல்லப்படுவது வழக்கம்.

இதனால் மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பொதுமக்களும் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. கும்ப ஆற்றில் நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 50 ஆண்டுகளாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் மாவட்ட வன அலுவலர் மற்றும் கலெக்டர் கலந்துகொள்ளும் ஜேஎப்சி கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் பழங்குடி பாரத பொதுச்செயலாளரும், மோதிரமலை கிராம வனக்குழு தலைவருமான சவுந்தர்ராஜ் காணி மாவட்ட கலெக்டருக்கு இது தொடர்பாக மனு அனுப்பி உள்ளார். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

Tags : bridge ,Kumbhar , Kumbaru, Permanent Bridge
× RELATED கண்டமனூர் அருகே கண்டமாகி கிடக்கும் ஓடை பாலம்