×

கடலூர் விபத்தில் வாலிபர் பலி: நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

கடலூர்: கடலூர் முதுநகர் பச்சயாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் பிரதாப் (24).கடந்த 2- 9 -2015 அன்று கடலூர் முதுநகர் இருந்து கடலூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். கடலூர்-சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் திடீரென பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரதாப் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் நஷ்டஈடு கேட்டு பிரதாப்பின் தாய் லட்சுமி, தங்கை பிரியா ஆகியோர் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவமணி மற்றும் வழக்கறிஞர்கள் சரவணன்,முகுந்தன் ஆகியோர் ஆஜராகினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரதாப்பின் குடும்பத்தினருக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ. 14 லட்சத்து 51 ஆயிரத்து 344 நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டஈடு தொகையை வழங்கவில்லை . இதையடுத்து நிறைவேற்று மனுதாக்கல் செய்தனர். இதில் வட்டியுடன் சேர்த்து ரூ. 17 லட்சத்து 52 ஆயிரத்து 566 ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மீண்டும் தொகை வழங்காததால் அரசு போக்குவரத்து கழக பேருந்தை ஜப்தி செய்ய கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலத்திற்கு செல்ல இருந்த அரசு போக்குவரத்து கழக பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : accident ,Cuddalore ,compensation Youth , Cuddalore, State Bus, Japti
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!