அனுமதியின்றி சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்: தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் பேட்டி

திருவனந்தபுரம்: அனுமதியின்றி சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்காது என அம்மாநில தேவசம் போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபாட்டுக்கு அனுமதிக்கும் விவகாரத்தில் எந்தவித தடையும் விதிக்காத உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விரிவான விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இதில், 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இது காலம், காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. குறிப்பிட்ட வயது பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய கடந்த 1991ல் கேரள உயர் நீதிமன்றமும் தடை விதித்தது. இந்நிலையில் மேற்கண்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்தாண்டு செப்டம்பர் 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி கேரளாவை சேர்ந்தநாயர் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த அமர்வில், நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், ஏ.எம்.கன்வீல்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோரும் இடம்பெற்றனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேரில் 3 நீதிபதிகள் வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தனர். 5 நீதிபதிகளில் பெரும்பான்மையாக 3 பேர் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டனர். 7 நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் வரை சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் அதுவரை தற்போதைய நிலையே தொடரும் எனவும், பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என அனுமதி வழங்கியுள்ளனர். இந்த நிலையில் மண்டல பூஜை மகர விளக்கு திருவிழாவிற்காக நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்க உள்ளது.

இதன் காரணமாக இன்று முதலே சபரிமலையில் பலத்த பாதுகாப்பு பணிகள் போடப்பட்டுள்ளன. மேலும், தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் கூறியதாவது: சபரிமலைக்கு இந்த ஆண்டு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அனுமதிக்க வேண்டாம் என்றும், மேலும் அந்த பெண்கள் நீதிமன்ற உத்தரவை பெற்று வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்திலும் அனுமதியின்றி பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியுள்ளதாவது இந்த ஆண்டு நிலக்கல், பம்பா, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு தேவையில்லை என தெரிவித்துள்ளார். சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என பினராயி விஜயன் கலந்துகொண்ட சிபிஎம் கூட்டத்திலும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: