மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல் என்ற நிலைக்கு வாய்ப்பே இல்லை: சரத் பவார் நம்பிக்கை

நாக்பூர்: மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல் என்ற நிலைக்கு வாய்ப்பே இல்லை. சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி நிச்சயம் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று என்சிபி தலைவர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை இல்லாததால் பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து ஆளுநர் கோஷியாரி பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மழையால் சேதமடைந்த பயிர்களைப் பார்வையிட நாக்பூர் மாவட்டத்துக்கு இன்று சென்றார். மகாராஷ்டிராவில் என்சிபி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி விரைவில் அமையும் என சரத் பவார் கூறினார். இந்தக் கூட்டணி ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். எங்களின் கூட்டணி அரசு, வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும். மாநிலத்தில் இடைத்தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் வராது.

நாங்கள் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்கள் கூட்டணி குறைந்தபட்ச செயல் திட்டம் அடிப்படையில் செயலாற்றி வருகிறது. மாநிலத்தில் அரசு எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதற்கு வழிகாட்டும். எங்கள் கூட்டணி 6 மாதங்கள் வரை நீடிக்காது என்று பட்னாவிஸ் பேசியுள்ளார். எனக்கு பட்னாவிஸை முதல்வராகத் தெரியும். ஆனால், ஜோதிடராக எனக்குத் தெரியாது. காங்கிரஸ், சிவசேனா, என்சிபி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளோம். எங்கள் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற நிலைக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம். எந்த மதத்துக்கும் எதிரானவர்களும் அல்ல நாங்கள் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Related Stories: