சமூக வலைத்தளங்களில் ஐஐடி நிர்வாகம் தொடர்பாக பல்வேறு தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது: ஐஐடி விளக்கம்

சென்னை: மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது என மாணவி மரணம் குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஐ.ஐ.டி குறித்து பரப்பப்படும் அவதூறுகள் வேதனை அளிப்பதாக ஐஐட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடியில் கேரளா மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப்(18) என்ற மாணவி எம்.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். வெளிமாநிலம் என்பதால் ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்தார். இந்நிலையில், பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமை விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் மாணவியின் பெற்றோர் முறையாக விசாரணை நடைபெறவில்லை, இந்த தற்கொலையில் மர்மம் உள்ளது என்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கேரளா முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

மாணவி தற்கொலை தற்போது இரண்டு மாநில விவகாரமாக மாறியுள்ளதால், தமிழக முதல்வரும் மாணவி தற்கொலை விவகாரம் குறித்து முழுமையாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது தற்கொலைக்கு ஐஐடி கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் தான் காரணம் என்று மாணவி பாத்திமா கடிதம் எழுதிவைத்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் மாணவி பாத்திமா தற்கொலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றனர். இந்த நிலையில், மாணவி பாத்திமா தற்கொலை குறித்து யாரும் தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரம் மற்றும் தனித்துவத்திற்கு பெயர் போனது சென்னை ஐ.ஐ.டி. என குறிப்பிட்டுள்ளது. மாணவி ஃபாத்திமா மரணம் எங்கள் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றும் மன மற்றும் உடல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ஐஐடி நிர்வாகம் தொடர்பாக பல்வேறு தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுடைய எதிர்காலம் பெரும் அளவு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதேபோல காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. ஐஐடி ஆசிரியர்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமான கருத்துக்களை சமூலவலைத்தளங்களில் பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, யாரும் சமூக வலைத்தளங்களில் தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது.

Related Stories: