மகாராஷ்டிராவில் 300 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

நாசிக்: மகாராஷ்டிராவில் 300 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பேஜ் என்ற சிற்றூர் உள்ளது. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த ஊரில் வசிக்கும் விவசாய தம்பதியின் மகனான 6 வயது ரித்தேஷ் ஜவன்சிங் என்ற சிறுவன் தனது வீட்டின் அருகே விளைநிலம் ஒன்றில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனை தொடர்ந்து ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் விழுந்த தகவல் காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கின. முதலில் சிறுவனுக்கு ஆக்ஸிஜன் தரப்பட்டு கயிறு உள்ளே இறக்கப்பட்டு சிறுவன் சிக்கியிருக்கும் ஆழம் கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஆழ்துளை கிணற்றில் சிறுவன் ரித்தேஷ் 50 அடி ஆழத்தில் சிக்கி கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு  படையினரும் சிறுவன் ரித்தேஷ் உரியோடு இருப்பது உறுதி செய்து அவனை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்தினர். 6 வயது சிறுவன் என்பதால் அவனுடன் தொடர்ந்து பேசிய அதிகாரிகள் லாவகமாக கைகளில் சுருக்கை மாட்டியதோடு அதனை பிடித்து கொள்ளுமாறு கூறி நேர்த்தியாக அவனை மேலே தூக்கினர். இவ்வாறு 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் ரித்தேஷ் பத்திரமாக மீட்கப்பட்டான். இதனை தொடர்ந்து அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். சிறுவன் நலமுடன் இருப்பதாக அவனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பயன்படுத்தப்படாத அந்த ஆழ்துளை கிணற்றை அமைத்த நபர் அதனை மூடி வைக்காமல் மிகவும் அலட்சியமாக இருந்ததால் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Related Stories: