×

மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐஐடி வளாகத்தில் திமுகவினர் போராட்டம்

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவி பாத்திமா தற்கொலைக்கு தூண்டப்பட்டதை கண்டனம் தெரிவித்து சென்னை ஐஐடி வளாகத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஐஐடியில் கேரளா மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப்(18) என்ற மாணவி எம்.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். வெளிமாநிலம் என்பதால் ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்தார். இந்நிலையில், பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமை விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் மாணவியின் பெற்றோர் முறையாக விசாரணை நடைபெறவில்லை, இந்த தற்கொலையில் மர்மம் உள்ளது என்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கேரளா முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். மாணவி தற்கொலை தற்போது இரண்டு மாநில விவகாரமாக மாறியுள்ளதால், தமிழக முதல்வரும் மாணவி தற்கொலை விவகாரம் குறித்து முழுமையாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது தற்கொலைக்கு ஐஐடி கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் தான் காரணம் என்று மாணவி பாத்திமா கடிதம் எழுதிவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பாத்திமா உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்த வகையில், மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்டோர் சென்னை ஐஐடி வளாகம் முன்பாக நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் மாணவி பாத்திமாவை சேர்ந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : DMK ,campus ,student ,IIT ,IIT Campus ,protest ,Fatima Student Fatima Against Action , Madras, IIT student, suicide, DMK, struggle
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...