சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கடைபிடிக்க வேண்டும்: நீதிபதி நாரிமன் அறிவுறுத்தல்

டெல்லி: சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று நீதிபதி நாரிமன் அறிவுறுத்தியுள்ளார். சபரிமலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாமல் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று நாரிமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன் அறிவுறுத்தியுள்ளார். சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துமாறு மாநில அரசிடம் எடுத்துக்கூறுங்கள் என நீதிபதி நாரிமன் அறிவுறுத்தியுள்ளார்.

சபரிமலை வழக்கு 5 நீதிபதிகள் அமர்வில் இருந்து 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது கிடையாது. இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகம். இந்த நிலையில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி கேரளாவைச் சேர்ந்த நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தரப்பு என மொத்தம் 51 சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேரில் 3 நீதிபதிகள் வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தனர். 7 நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் வரை சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: