அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டள்ளது. நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டத்தை 3- ஆக பிரிப்பதாக தெரிவித்தார். வேலூரை தலைமை இடமாக கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் ராணிப்பேட்டையை தலைமை இடமாக கொண்டு மற்றொரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, அரக்கோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்காமல் ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடையடைப்பு, ஆா்ப்பாட்டம், நீதிமன்றப் புறக்கணிப்பு, கருப்புக்கொடி ஏற்றுதல் என பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தினா். இதுதொடா்பாக நீதிமன்றத்திலும் வழக்குத் தொடா்ந்தனா்.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நவம்பா் 12-ம் தேதி தமிழக அரசு ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது. அதில், வேலூர் மாவட்டத்தில் வேலூர் தவிர குடியாத்தம் புதிய வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகாகளும், புதிதாக கே.வி.குப்பம் தாலுகாவும் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. கே.வி.குப்பம் தாலுகாவில் கே.வி.குப்பம், வடுகன்தாங்கல் ஆகிய 2 பிர்க்காக்களில் உள்ள கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குடியாத்தம் புதிய வருவாய் கோட்டத்தில் பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய தாலுகாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அரக்கோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories: